தமிழ்நாடு

நில அபகரிப்பு வழக்குகள்: சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றம்

28th Aug 2019 01:42 AM

ADVERTISEMENT


சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறாத காரணத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 82 நில அபகரிப்பு வழக்குகள் சம்பந்தப்பட்ட ஆளுகைக்கு உட்பட்ட நீதிமன்றங்களுக்கு விசாரணைக்காக மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அப்போது திமுக ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் சொத்துகளை ஆளுங்கட்சியினர் சட்டவிரோதமாக அபகரித்ததாகக் கூறி அதுதொடர்பான புகார்களை விசாரிக்க நில அபகரிப்பு தடுப்புப் பிரிவை காவல்துறையில் உருவாக்கினார். இந்த வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் சிறப்பு நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டன. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசாணைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நில அபகரிப்பு வழக்கின் புகார்தாரர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், நில அபகரிப்பு குறித்து தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் எனது வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கவில்லை. எனவே வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பியிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்குரைஞர் முகமது ரியாஸ், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் நில அபகரிப்பு தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இதுவரை 82 நில அபகரிப்பு வழக்குகளை விசாரித்து குற்றப்பத்திரிகையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஆனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. எனவே 82 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதுகுறித்து துணை ஆணையர் அறிக்கையும் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி,
 வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால், நிலத்தை பறிகொடுத்த புகார்தாரர்கள் எந்த நிவாரணமும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 82 வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கவில்லை. தொடர்ந்து நிலுவையில் இருப்பதால் மேலும் காலதாமதமாகும். எனவே இந்த 82 வழக்குகளையும் சம்பந்தப்பட்ட ஆளுகைக்கு உட்பட்ட நீதிமன்றங்களே விசாரிக்கலாம். இதற்கான குற்றப்பத்திரிகைகளை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT