தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கை, வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ நடத்தி வரும் விசாரணை மற்றும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து தெரிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிட்டதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தமிழக போலீஸார் பதிவு செய்த 207 வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் காவல்துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் பங்கு, போராட்டக்காரர்களின் பங்கு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விசாரணையின் நிலை குறித்த அறிக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.
அரசுத் தரப்பு விளக்கம்: இதைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் வாதிடுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த சூழல் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் இதுவரை 365 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளது. 550 ஆவணங்களை சாட்சியாக எடுத்துக் கொண்டுள்ளது. மேலும், 465 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த விசாரணை ஆணையத்தின் என்ன நிலையில் உள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் ஆணையத்தின் செயலாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.