தமிழ்நாடு

திருச்செந்தூர் ஆவணித் திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி வீதி உலா

28th Aug 2019 12:54 AM

ADVERTISEMENT


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா எட்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி சண்முகப் பெருமான் வெள்ளை சாத்தி வெள்ளிச் சப்பரத்திலும், பகலில் பச்சை சாத்தி கோலத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளினார்.
திருச்செந்தூரில் சிறப்புமிக்க ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் தனித் தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
முக்கிய  நிகழ்வாக திங்கள்கிழமை மாலை வள்ளி, தெய்வானையுடன் சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி தங்கச் சப்பரத்தில் முன்பக்கம் சிவன் அம்சமாகவும், பின்பக்கம் நடராஜர் அம்சமாகவும் எழுந்தருளினார். எட்டாம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை காலை வெள்ளை சாத்தி பெரிய வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி திருவீதி உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்புத் தீபாராதனை நடைபெற்று, காலை 10.30 மணியளவில் பச்சை சாத்தி, பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப் பெருமானும், வள்ளியம்மனும் புதன்கிழமை பகலில் தனித்தனி பல்லக்கிலும், இரவு சுவாமி தங்கக் கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வருகின்றனர்.
நாளை தேரோட்டம்: விழாவின் முக்கிய நாளான பத்தாம் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை (ஆக. 29)  நடைபெறுகிறது. காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலையை அடைகின்றன.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT