திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்றவை என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசினார்.
மாநாட்டின் தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியது:
பெரியார் காலத்தில் இருந்த எதிரிகள் நேர்மையான எதிரிகள். ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ள எதிரிகள் சூழ்ச்சிகளைக் கையாளும் எதிரிகளாக உள்ளனர். அடக்குமுறைகளைச் சந்தித்து சிறைக்குச் செல்ல திராவிடர் கழகத்தினர் எப்போதும் தயாராக இருக்கிறோம். திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்றது. திமுக அரசியலை பார்த்துக் கொள்ளும். திராவிடர் கழகம் அதற்கு பாதுகாப்பாக அணியை உருவாக்கி பாதுகாக்கும். எந்த விலையும் கொடுத்து ஜாதியை ஒழித்து, புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார் அவர்.
கே.எஸ்.அழகிரி, (காங்கிரஸ்): மோடியால்தான் திராவிட இயக்கத்தின் அவசியத்தை எல்லோரும் தெரிந்து கொள்ள முடிகிறது. பெரியாரால்தான் தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற முடியவில்லை.
இரா. முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): கொள்கை அடிப்படையில் பொதுவுடைமை இயக்கத்தைப் பிரிக்க முடியாது. திராவிட இயக்கத்தின் தேவை என்றைக்கும் உள்ளது. தமிழகத்தைப் போல மற்ற மாநிலங்களில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்திருந்தால் பாஜக-வுக்கு மத்தியில் பெரும்பான்மை கிடைத்திருக்காது .
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): திராவிடர் கழகத்தை பெரியாருக்கு பிறகு, மணியம்மை; அவரைத் தொடர்ந்து தூக்கிபிடித்து வருபவர் கி.வீரமணி ஆவார். தமிழகத்தில் எத்தனை ஆண்டு தவம் காத்தாலும் தாமரை மலராது. மார்க்சிஸ்ட் கட்சியும், பெரியார் கொள்கையும் நாணயத்தின் இரு பக்கமாக இருந்து செயல்படுகின்றன.
தொல்.திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஜாதி, மத அரசியல் 75 ஆண்டுகளில் துடைத்தெறிந்துவிட முடியாது. பெரும்பான்மை சமூகம் கல்வி, அதிகாரம் பெறாமல் முடங்கிக் கிடப்பதைக் கண்டு, ஆதிக்க சக்தியைத் தகர்க்க வேண்டும் என்ற வகையில், நடைமுறையில் உள்ள சிக்கல்களை அறிந்து கடவுள் மறுப்பை கையில் எடுத்தார் பெரியார்.
கே.எம்.காதர்மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): இட ஒதுக்கீடு பிரச்னை தற்போது பெரிதாகி உள்ளது. இட ஒதுக்கீடு இல்லாமல் ஆக்கிவிடலாம் என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் கருத்தை ஜனநாயகம் என்று சொல்வதாக உள்ளது. மாநில உரிமை பறிக்கப்படுகிறது.
எம்.எச்.ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்ற பிரதமர் மோடி, அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை குழிதோண்டிப் புதைத்து விட்டார். தமிழகம் என்றைக்கும் பெரியார் மண்தான். திராவிட இயக்கத்தினர் பெரியாரின் கருத்துகளை கிராமங்கள்தோறும் பரப்ப வேண்டும்.
தீர்மானங்கள்: மாணவர்களிடம் ஜாதி பாகுபாடு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை வரைவு திரும்பப் பெற வேண்டும். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை அளிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ளதைப்போல மத்திய அரசிலும் இட ஒதுக்கீட்டுக்கான தனி சட்டம் இயற்ற வேண்டும். மண்டல் குழு பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்றிட வேண்டும். நீதித் துறையில் சமூக நீதி வேண்டும். நீட் மற்றும் நெஸ்ட் தேர்வுகளை நிரந்தரமாக நீக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு நீக்கப்பட வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி அம்சம் கட்டாயம் தேவை. இந்தி, சம்ஸ்கிருதத் திணிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்.
சினிமா கவர்ச்சியை மட்டும் மூலதனமாக்கி, அரசியலில் அடி எடுத்து வைத்து, அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.