தமிழ்நாடு

ஜெயலலிதா சொத்துகள் தொடர்பான வழக்கு: தீபா, தீபக் நேரில் ஆஜராக உத்தரவு

28th Aug 2019 02:33 AM

ADVERTISEMENT


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஒருவரை நியமிக்க கோரிய வழக்கில், ஜெயலலிதாவின் உறவினர்கள் தீபா, தீபக் ஆகியோர் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில்  அதிமுக நிர்வாகி புகழேந்தி  தாக்கல் செய்த மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை உயர்நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி, செல்வ வரி பாக்கிக்காக  அவரது போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத் பங்களா உள்ளிட்ட சில சொத்துகளை முடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனுதாரர் தரப்பில், ஆஜரான வழக்குரைஞர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது மறைவுக்குப் பின்னர் தனது சொத்துகள் யாருக்குச் சென்றடைய வேண்டும் என உயில் ஏதும் எழுதி வைக்கவில்லை. எனவே, அவரது சொத்துகளை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளை நிர்வாகியாக நியமிக்க வேண்டும் என வாதிட்டார்.
குறுக்கிட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் போயஸ் தோட்ட இல்ல வீடு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என கேள்வி எழுப்பினர். அப்போது, அந்த வீடு தற்போது  சென்னை மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது,  தீபா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் நடைபெற்றன. ஆனால்,  அதன்பிறகு தீபாவும், தீபக்கும் போயஸ் தோட்ட வீட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.  ஜெயலலிதா கடந்த 1996-இல் கடனாகப் பெற்ற ரூ. 2 கோடி, தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ.20 கோடியாக உயர்ந்துள்ளது என்றார். அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி ரூ.40 கோடி, அதற்காக வருமான வரித்துறை அவரது போயஸ் தோட்ட இல்லத்தை முடக்கி வைத்துள்ளது. மேலும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அந்த வீட்டை அளவிட கால தாமதமாகிறது என்றார்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், வருமான வரித் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை செய்து பலரைக் கைது செய்கின்றனர். வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. எனவே, வருமான வரித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாமே என கருத்து தெரிவித்தனர்.  இந்த வழக்கை அனைவரும் கவனிக்கின்றனர். எனவே, ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பாக வழக்குத் தொடர்ந்தது குறித்து தெரிந்து கொள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT