தமிழ்நாடு

சாலை விபத்துகளில்  தலைக்கவசம் அணியாமல் இறந்தோர் 54 சதவீதம்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்

28th Aug 2019 02:34 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இறந்தோரில் தலைக்கவசம் அணியாமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மாநில சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன், நெடுஞ்சாலைகள், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, போக்குவரத்துத் துறைகளின் செயலாளர்கள், காவல் துறை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியது:
இருசக்கர வாகனங்கள்: தமிழகத்தில் சாலை விபத்துகளால் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 7 ஆயிரத்து 526 விபத்துகளும், கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையில் 6 ஆயிரத்து 522 விபத்துகளும் நடந்தன. இது கடந்த ஆண்டைவிட 13 சதவீதம் குறைவாகும். கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையில் 5 ஆயிரத்து 559 கடுமையான காய விபத்துகளும், இந்த ஆண்டு ஜூலை வரையில் 2 ஆயிரத்து 979 கடுமையான விபத்துகளும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டன. இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் குறைவாகும்.
மொத்த உயிரிழப்பு விபத்துகளில் இருசக்கர வாகனங்களில் மட்டும் 41 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களில் 27 சதவீதமும் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் இறந்தவர்களில் 54 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாததால் ஏற்பட்ட உயிரிழப்பாகும்.
குறைவுக்குக் காரணம்: ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சாலை பாதுகாப்புக் கூட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த மாவட்டங்களில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளை ஆராய்ந்து விபத்துக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவைசீர் செய்யப்பட்டுள்ளன. இதுவே விபத்துகள் குறைய ஒரு காரணமாகும்.
டிசம்பர் முதல் புதிய முறை: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஏற்படும் வாகன நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பாஸ்ட் டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறை வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பேசியதாவது:-
மாநிலங்களில் உள்ள அனைத்து சாலைகளின் ஓரமாக அமைந்துள்ள கிணறுகள், குட்டைகளைக் கண்டறிந்து அந்த இடத்துக்குத் தகுந்தபடி தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் குறைந்த வெளிச்சமுள்ள பகுதிகளில் நடுத்தர உயர்மின்கோபுர விளக்குகள் அமைக்க வேண்டும். இதன்மூலம் விபத்துகள் வெகுவாகக் குறையும்.
தமிழகத்தில் அதிக விபத்துகள் ஏற்படும் இடங்களில் குறிப்பாக கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் முத்தரசு நல்லூர் பகுதியிலும், கோவை-கரூர் நெடுஞ்சாலையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT