தமிழ்நாடு

குறைவான மாணவர்களைக் கொண்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

28th Aug 2019 02:43 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில், கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்த விழிப்புணர்வு காரணமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு 1.70 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதேவேளையில் 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 1, 238-ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 1, 531 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் 293 பள்ளிகள் 10-க்கும் குறைவான மாணவர்களை கொண்டதாக மாறியுள்ளன. அதேநேரம் 70 சதவீத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரவில்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 50 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர், கரூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சிவகங்கை மாவட்டங்களில் தலா 3 பள்ளிகளிலும், நீலகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தலா 4 பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இல்லை. 
இதற்கிடையே, ஒரு மாணவர் கூட இல்லாத 46 அரசுப் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT