குமரி மாவட்ட கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கொந்தளிப்பால், அழிக்கால் மீனவ கிராமத்தில் 75 வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால், மக்கள் வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் கடல் கொந்தளிப்பு இருப்பது வழக்கம். சில தினங்களுக்கு முன்னர் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள அழிக்கால் பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து மக்கள் அவதியுற்றனர்.
மேலும், கடல்நீருடன் மணலும் சேர்ந்து வந்து வீடுகளை நிரப்பிவிட்டது. பல வீடுகளில் கடல்நீர் வடிந்த பிறகு மணல் மூட்டை, மூட்டையாக தேங்கிக் கிடந்தது. அதனை அகற்றும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அதிகாலை முதலே கடல் அலைகள் கரையை நோக்கி ஆர்ப்பரித்து வந்து தடுப்புச் சுவர்களில் மோதின. நேரம் செல்லச் செல்ல அலையின் வேகம் அதிகரித்து குடியிருப்புப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது. இதில், சுமார் 75 க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் நீர் சூழ்ந்தது.
கடல் கொந்தளிப்பு தொடருவதால், வீடுகளுக்குள் கடல் நீர் புகாமல் இருக்க மணல் மூட்டைகளைக் கொண்டு அப்பகுதி மக்கள் தடுப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், தண்ணீர் புகுந்த வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி பாதுகாப்பான இடங்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
அடுத்தடுத்து கடல் கொந்தளிப்பு நிகழ்வுகள் ஏற்பட்டு கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் கவலையடைந்துள்ள அப்பகுதி மக்கள், அழிக்கால் பகுதியில் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட அழிக்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்திய ஆட்சியர் மு.வடநேரே, நாகர்கோவில் அருகேயுள்ள அழிக்கால் கடற்கரைப் பகுதியில் விரைவில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.