தமிழ்நாடு

ஈரோட்டில் கருணாநிதி சிலை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

28th Aug 2019 01:39 AM

ADVERTISEMENT


ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவ அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈரோடு திமுக தெற்கு மாவட்டச் செயலர் எஸ்.முத்துச்சாமி தாக்கல் செய்த மனுவில், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி 5 முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்துள்ளார். தனது இறப்பு வரை சட்டப் பேரவை உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார்.
அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் அவரது முழுஉருவ வெண்கலச் சிலையை நிறுவ மாநகராட்சியிடமும், காவல் துறையிடமும் அனுமதி கேட்டோம். ஆனால், அவர்கள் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். எனவே, பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலை அருகே கருணாநிதியின் முழுஉருவ வெண்கலச் சிலையை நிறுவ உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சனும், அரசுத் தரப்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணும் ஆஜராகி வாதிட்டனர்.  
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனு தொடர்பாக தமிழக அரசு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT