யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஆக.28) தொடங்குகிறது.
அரசு, தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுôரிகளில் பி.என்.ஒய்.எஸ். எனப்படும் இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. குறிப்பாக, அரசுக் கல்லூரியில் 60 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 385 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 192 இடங்களும் உள்ளன.
இந்நிலையில், அந்தப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நிகழாண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப விநியோகம், கடந்த மாதத்தில் நடைபெற்றது. ஆன்லைன் வாயிலாகவும், யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பங்களைப் பெற்றனர். அவற்றில் 1,688 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கடந்த சில நாள்களுக்கு முன்பு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவ துறை வளாகத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்புப் பிரிவினருக்கும், கட்- ஆப் மதிப்பெண்கள் 161 வரை பெற்ற மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த நாளில் (ஆக.29) மற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.