பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்திலே ஆக்கப்பூர்வமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் குறித்த செய்திகளை அதிக அளவில் வெளியிடுவது என அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளின் ஊடகங்கள் தீர்மானித்துள்ளன. இந்த முடிவு மிகுந்த வரவேற்புக்குரியது.
தனிநபர் முதல் அரசாங்கம் வரை என்னென்ன நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்? என்பது குறித்து பல்வேறு தருணங்களில் விளக்கமாகக் கூறியுள்ளோம். ஆக்கப்பூர்வமாக மக்களிடத்திலே கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. பன்னாட்டு ஊடகங்களைப் போலவே தமிழக ஊடகங்களும் பருவ நிலை மாற்றத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து செய்திகளை வழங்க வேண்டும்.
அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும், உதவிகளையும் வழங்க பசுமைத் தாயகம் அமைப்பு தயாராக உள்ளது என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.