தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபைத் தலைவராக ஜி.கே. வாசன் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
திருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆஸ்ரம வளாகத்தில் உள்ள தியாகராஜர் திருமண மண்டபத்தில் ஸ்ரீதியாக பிரம்ம மகோத்சவ சபையின் நிர்வாகக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. சபைத் தலைவர் ஜி.ஆர். மூப்பனார் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதையடுத்து, அச்சபையின் புதிய தலைவராக தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே. வாசன் தெரிவித்தது:
இந்தச் சபை 1941 -ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு, செயல்படத் தொடங்கியது. இச்சபை கர்நாடக இசையை வளர்ப்பதற்காகவும், இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் தொடர்ந்து செயல்படுகிறது. இச்சபையின் நிர்வாகக் குழுக் கூடி என்னை தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன்.
இக்கூட்டத்தில், 173 -ஆம் ஆண்டு தியாகராஜ ஆராதனை விழா 2020, ஜனவரி 11-ஆம் தேதி தொடங்கி 15 -ஆம் தேதி வரை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதில், நிறைவு நாளான ஜன. 15-ஆம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை இணைப்பது நடைபெறும் என்றார் வாசன்.