தமிழ்நாடு

ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.48 ஆயிரம் கோடி வேண்டும்: தில்லி மாநாட்டில் தமிழகம் வலியுறுத்தல்

27th Aug 2019 01:37 AM

ADVERTISEMENT


ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழகத்திற்கு சுமார் ரூ.48 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று மாநில அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தினார்.
தில்லியில் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் சார்பில் ஜல் ஜீவன் மிஷன் தொடர்பான மாநில அமைச்சர்கள் மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். இணையமைச்சர் ரத்தன் லால் கட்டர், குடிநீர் - துப்புரவுத் துறை செயலர் பரமேஸ்வரன் ஐயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசின் சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார். மாநிலங்களில் ஜல் சக்தி திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள், உயரதிகாரிகளிடம் ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்த நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:
சோழர் காலத்தில் இருந்து ஒருங்கிணைந்த நீர் நிலைகளைக் கட்டமைப்பதில் தமிழகம் முன்னோடியாக இருந்து வருகிறது. நீர் மேலாண்மை முறைகளையும் திறம்பட செயல்படுத்தி வருகிறது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை  மக்கள் இயக்கமாக செயல்படுத்தி வெற்றி கண்டார். 
அதே வழியில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடிமராமத்து திட்டம் மூலம் நீர் நிலைகளைப் புனரமைக்கும் வகையில் தமிழ்நாடு நீர் ஆதாரங்கள் பாதுகாப்பு, சேகரிப்பு இயக்கம் எனும் பிரசாரத் திட்டத்தைத் தொடக்கிவைத்துள்ளார். மக்கள் பங்கேற்புடன் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்தில் உள்ள 5,807 கிராம ஊராட்சிகள், 249 ஊரக வட்டங்கள் ஆகியவற்றைச் சென்றடையும் வகையில், 541 வருவாய் பிர்காக்களில் நீர்ப் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஜல் சக்தி இயக்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, 2024-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஊரக குடியிருப்புக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஜல் ஜீவன் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 
தமிழக அரசு ஊரகப் பகுதிகளில் 99.11 சதவீதம் அளவுக்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. ஆனால், போதிய நீர் ஆதாரம் இல்லாததால், ஊரகப் பகுதிகளில் செயல்பாட்டில் வீட்டுக் குழாய் இணைப்புகள் 20 சதவீதம் மட்டுமே உள்ளன.
 ஜல் சக்தி அமைச்சக அறிவுறுத்தலின்படி, 2024-ஆம் ஆண்டுக்குள் ஊரகப் பகுதிகளில் 96 லட்சம் வீடுகளுக்கு செயல்பாடுடைய வீட்டுக் குழாய் இணைப்புகளை அளிக்க வேண்டியுள்ளது. இதற்கு நீர் வழங்கலை அதிகரிக்க வேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்கு குடிநீர்க் குழாய்கள் பதிப்பது உள்பட பல்வேறு பணிகளுக்காக ரூ. 47,820 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த நிதி ஆதரவை ஜல் ஜக்தி அமைச்சகம் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என அமைச்சர் வேலுமணி கேட்டுக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலுமணி கூறியதாவது: நாட்டில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளிலும் அனைத்துக் குடும்பங்களுக்கும் வீட்டுக் குழாய் இணைப்பு மூலம் ஐந்து ஆண்டுகளுக்குள் குடிநீர் வழங்கப்படும் என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்தார். 
இதனடிப்படையில் மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தால் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை அமல்படுத்துவதற்காக நடத்தப்பட்ட மாநிலஅமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழக ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தேன். 
மேலும், குடிமராமத்துத் திட்டம், மழை நீர் சேகரிப்புத் திட்டம் ஆகியவை குறித்தும் எடுத்துரைத்தேன்.
நரேகா திட்டம் மூலம் ரூ.750 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அனைத்துக் குளங்களையும் மேம்படுத்தக் கூடிய வகையில், திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. வீட்டுக் குழாய் இணைப்புகளை 100 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு, ஜல் சக்தி மிஷன் திட்டத்தில் கூறியுள்ளது. 
இத்திட்டத்தைச் செயல்படுத்த சுமார் ரூ.48 ஆயிரம் கோடி நிதி கேட்டுள்ளோம். தமிழகத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், கோதாவரி - காவிரி நீர் இணைப்புத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் 1 டிஎம்சி நீரைச் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வண்டல் மண் எடுக்கும் திட்டம் மூலம் மேட்டூர் அணையில் தூர்வாரி நீரைக் கூடுதலாகச் சேமிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT