கிரானைட் முறைகேடு தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவன பங்குதாரர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், அமலாக்கத்துறையினர் தனி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன பங்குதாரர் பழனிச்சாமி, அவரது மனைவி செல்வி, முன்னாள் பங்குதாரரும், பி.ஆர்.பி. மருமகளுமான சந்திரகலா, முன்னாள் பங்குதாரர் சிவரஞ்சனி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையில் கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கை அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் ஆய்வு நடத்தி அனுமதி பெறாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அறிக்கை அளிக்கப்பட்டது.
இந்த அறிக்கை அடிப்படையில் கிரானைட் குத்தகைதாரர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எங்கள் மீது அமலாக்கத்துறை 2013 டிசம்பர் 13-இல் தனி வழக்குப்பதிவு செய்தது. அதில், சட்டவிரோதமாக குவாரி நடத்தி அரசுக்கு ரூ. 2,830.98 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, ரூ.102.95 கோடி சொத்துகளையும், வங்கியில் டெபாசிட் செய்த ரூ.32 லட்சத்தையும் அமலாக்கத்துறை முடக்கி 2016 டிசம்பர் 9-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதற்கு எதிராக தீர்ப்பாயத்தில் நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. முறைப்படி உரிமம் பெற்றே கிரானைட் தொழில் செய்தோம். எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை. எனவே, அமலாக்கத்துறை எங்கள் மீது பதிவு செய்து, மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கிரானைட் வழக்குகளோடு மாற்றி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.