தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை காருக்குள் சிக்கிய இரண்டு வயது பெண் குழந்தை, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது.
தூத்துக்குடி புதுகிராமத்தைச் சேர்ந்தவர் ரோகித். சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் ரியானா சம்தா (2). ரோகித் கடந்த 14-ஆம் தேதி குடும்பத்துடன் தூத்துக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த குழந்தை ரியானா சம்தா, ஞாயிற்றுக்கிழமை திடீரென காணாமல் போனதால் பெற்றோர் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் மயங்கிய நிலையில் குழந்தை கிடந்தது தெரியவந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, காருக்குள் ஏறி கதவை மூடிய பிறகு திறக்கத் தெரியாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது என போலீஸார் தெரிவித்தனர்.