அறப்போர் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடந்த 2018-ஆம் ஆண்டு பங்கேற்ற அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அந்த முறைகேடுகளில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்பு உள்ளதாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஜெயராம் வெங்கடேசன் மீது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயராம் வெங்கடேசன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இந்த மனு தொடர்பாக அரசு தரப்பில் 8 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். அதுவரை மனுதாரர் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.