வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

புதுவை பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: நியமன எம்எல்ஏக்கள் ஆதரவு

DIN | Published: 25th August 2019 02:38 AM

புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்துக்கு எதிராக என்.ஆர்.காங்கிரஸ் கொடுத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மான கடிதத்துக்கு நியமன எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
 கடந்த சில நாள்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் என்.ரங்கசாமி தலைமையில் அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜெயபால், டி.பி.ஆர்.செல்வம், அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட்ராயரைச் சந்தித்து, பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கான கடிதத்தைக் கொடுத்தனர்.
 இந்த நிலையில், புதுவை மாநில பாஜக தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான வி.சாமிநாதன், செல்வகணபதி எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலர் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்து, அதன் செயலர் வின்சென்ட்ராயரிடம் பேரவைத் தலைவருக்கு எதிராக என்.ரங்கசாமி கொடுத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸுக்கு ஆதரவாகக் கடிதம் கொடுத்தனர்.
 பின்னர், மாநில பாஜக தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிராக என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி கொடுத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸுக்கு ஆதரவு தெரிவித்து சட்டப்பேரவைச் செயலரிடம் கடிதம் கொடுத்தோம். ரங்கசாமி முதல்வராக வேண்டும் என்று மக்கள் மட்டுமல்ல, நாங்களும் விரும்புகிறோம். புதுவை மாநிலத்தில் மாற்றம் வர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ரங்கசாமிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்றார் அவர்.
 அப்போது, "அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக எழுந்த தகவலையடுத்தே இதுபோன்ற முடிவை எதிர்க்கட்சிகள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறதே' என செய்தியாளர்கள் கேட்டனர்.
 "தகுதி நீக்கம் செய்வதற்கான காலம் கடந்துவிட்டது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களே அரசுக்கு எதிராகப் பேசி வருகின்றனர். குறிப்பாக, பொதுப் பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விரைவில் ஆளுநர் கிரண் பேடியை சந்தித்து பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, கடிதம் கொடுப்போம். ஆட்சி மாற்றம் நடந்தால் அதற்கு பாஜக ஆதரவு தெரிவிக்கும்' என்றார் சாமிநாதன்.
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீஸார் விசாரணை
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து திமுக குரல் கொடுக்கும்: சுப்புலட்சுமி ஜெகதீசன்
​மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன: ஜவாஹிருல்லா 
கண்டுபிடிப்பைக் கைவிட வலியுறுத்தி ஆராய்ச்சியாளருக்கு கொலை மிரட்டல்