முத்துகுமரன் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம்: வரும் 27-இல் எம்பிபிஎஸ் கலந்தாய்வு

நீதிமன்ற உத்தரவின்படி மாங்காடு முத்துகுமரன் மருத்துவக் கல்லூரிக்கு உறுப்புக் கல்லூரி அங்கீகாரத்தை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர்


நீதிமன்ற உத்தரவின்படி மாங்காடு முத்துகுமரன் மருத்துவக் கல்லூரிக்கு உறுப்புக் கல்லூரி அங்கீகாரத்தை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் வழங்கியுள்ளது. இதையடுத்து அந்தக் கல்லூரியில் உள்ள 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
முத்துகுமரன் கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதற்காக சில கட்டடங்களுக்கு பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சீல் வைத்தது. இதையடுத்து, நிகழாண்டுக்கான உறுப்பு கல்லூரி அங்கீகாரத்தை மருத்துவப் பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்தது. இதனால், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை நடத்த முடியாத நிலை அக்கல்லூரிக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்றத்தில் முத்துகுமரன் கல்லூரி முறையிட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் மாணவர் சேர்க்கை மற்றும் உறுப்பு கல்லூரிக்கான அங்கீகாரத்தை வழங்குமாறு உத்தரவிட்டது.
அதன்படி அந்த அங்கீகாரத்தை பல்கலைக் கழகம் வழங்கியது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி அந்த கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வை வரும் 27-ஆம் தேதி மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. 
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுகுறித்த விவரங்கள் சுகாதாரத் துறை இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com