பி.எட். : திங்களன்று இரண்டாம் கட்ட கலந்தாய்வு 

முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் காலியாக உள்ள இளநிலை ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) இடங்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.


தினமணி  செய்தி எதிரொலி
முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் காலியாக உள்ள இளநிலை ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) இடங்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 2,040 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது.
வழக்கமாக பி.எட். கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்டங்கள் அல்லது மூன்று கட்டங்களாக நடத்தப்படும். 
இந்த நிலையில், நிகழாண்டில் 3,800 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தபோதும், ஒரே ஒரு கட்டமாக மட்டுமே கலந்தாய்வு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 2,040 இடங்களில் 1,820 இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்திருந்தது. 220 இடங்கள் சேர்க்கையின்றி காலியாக இருந்தன.
இதில் 7 அரசுக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பிவிட்ட நிலையில், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மட்டுமே இந்த 220 இடங்களும் காலியாக இருந்தன. இந்த நிலையில், போதிய விண்ணப்பங்கள் இல்லை என்றும் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறி சேர்க்கையின்றி காலியாக இருந்த 220 இடங்களுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டாம் என அதிகாரிகள் முடிவு செய்தனர். இது அரசு உதவிபெறும் கல்லூரி நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான செய்தி தினமணி நாளிதழில் வெள்ளிக்கிழமை வெளியானது. அதையடுத்து, காலியாக உள்ள பி.எட். இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் தில்லைநாயகி கூறியது:
முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் காலியாக உள்ள 220 பி.எட். இடங்களுக்கு வரும் திங்கள்கிழமை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. 
அதற்காக, கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்களை, அவர்களின் செல்லிடப்பேசி மூலம் தொடர்பு கொண்டு வரவழைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

அரசு கல்லூரிகளிலும் முன்கூட்டியே  சேர்க்கையை அனுமதிக்க வேண்டும்
பி.எட். மட்டுமன்றி பொறியியல், கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் என அனைத்துப் படிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கையிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சேர்க்கையை நடத்துகின்றன. நடைமுறைப்படி, ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்ட பின்னரே தனியார் சுயநிதி கல்லூரிகள் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறையை தனியார் கல்லூரிகள் பின்பற்றுவதில்லை. இதுகுறித்து அரசுக் கல்லூரி பேராசிரியர் நாகராஜன் கூறியது:
தனியார் சுயநிதி கல்லூரிகள் நடைமுறைகளை மீறி முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்துவதை அறிந்திருந்தும், அரசு உயர் அதிகாரிகள் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் தனியார் கலை-அறிவியல் கல்லூரிகளின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில், அவர்களுக்குப் போட்டியாக அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் முன்கூட்டியே சேர்க்கையை தொடங்க கல்லூரி கல்வி இயக்ககம் கடந்த சில ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறது. இதன் காரணமாக, அரசு கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
ஆனால், முன்கூட்டியே சேர்க்கை நடத்தக் கூடாது என்ற நடைமுறை பி.எட். மற்றும் பி.இ. சேர்க்கையில்  பின்பற்றப்படுவதில்லை. இதன் காரணமாக, அரசின் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னரே தனியார் கல்லூரிகள் சேர்க்கையை முடித்து விடுகின்றன. கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எனவே, சேர்க்கை நடைமுறைகளை அரசு கடுமையாக பின்பற்றுவதுடன், அரசு ஒதுக்கீட்டு பி.எட். மற்றும் பி.இ. படிப்புகளில் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com