தமிழகத்தில் விரைவில் உணவுப் பூங்கா : மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி

மாநில அரசு நிலம் வழங்கினால் தமிழகத்தில் விரைவில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என  மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் விரைவில் உணவுப் பூங்கா : மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி


மாநில அரசு நிலம் வழங்கினால் தமிழகத்தில் விரைவில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என  மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார். 
சிஐஐ, தமிழகம் மற்றும் கேரள அரசு சார்பில் உணவு உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலில் உருவாகி வரும் நவீன தொழில்நுட்பம் குறித்த சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி தொடக்க விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இதில் மத்திய இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். 
நிகழ்வில், ராமேஸ்வர் தேலி பேசியது:  உணவு பதப்படுத்துதல் துறைக்கு ஒதுக்கப்பட்டு உள்ள ரூ.1,400 கோடியில்  பல்வேறு திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பிரதமர் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் விவசாயக் கழிவுகளைக் குறைக்கவும், பதப்படுத்துவதை நவீனப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதே போல் அம்பர்லா என்ற திட்டமும் பல மாநிலங்களில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அம்பர்லா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 12 திட்டங்களில் 9 திட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. பின்லாந்து நாட்டினர் கடல்சார் உணவுப் பொருள்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதற்கேற்ற இடம் ராமேஸ்வரம். இவ்வாறு முதலீடு செய்ய வருவோருக்கு தமிழக அரசு தக்க உதவிகளை செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் பெரிய மற்றும் குறு உணவு பூங்கா அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. இதனை அமைப்பதற்கு 10 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரையிலான நிலம் தேவைப்படும். இது குறித்து கடந்த 12-ஆம் தேதி மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசினோம். நிலத்தை ஏற்பாடு செய்தால் தமிழகத்தில் பெரிய அளவில் உணவு பூங்கா அமைக்கப்படுவதோடு, இந்தத் திட்டத்தில்  தமிழகத்துக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படும் என தமிழக முதல்வரிடமும் கூறி உள்ளேன் என்றார் அமைச்சர் தேலி. 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:
உணவு உற்பத்தித் துறையில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. உணவு பதப்படுத்துதல் துறையில் இந்திய அளவில் தமிழகத்தின் பங்கு 7 சதவீதமாக உள்ளது. சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த உணவு பதப்படுத்தும் திட்டத்தால் விவசாயிகளில் வருமானம் அதிகரிக்கும். 130 மில்லியன் டன் அளவுக்கு இந்தியாவில் காய்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது மொத்த விவசாய உற்பத்தியில் 18 சதவீதம் ஆகும். ஆனால், அவற்றில் 25 முதல் 30 சதவீதம் வரை பாதுகாக்கப்படாமல் வீணாகின்றன. அதை சரிசெய்ய உணவு பாதுகாப்பில் நாம் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்றார். 
அமைச்சர் ஆர்.காமராஜ்: தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது:
அதிக அளவில் தானிய உற்பத்திக்கான ரிஷி கர்மா விருதை தொடர்ந்து தமிழகம் பெற்று வருகிறது. இந்திய அளவில் கால்நடை வளர்ப்பில் முதலிடம், அரிசி உற்பத்தியில் இரண்டாம் இடம்,  என தொடர்ந்து முன்னணியில் இருக்கிறோம். இந்த உணவுகளை உற்பத்தி செய்வதோடு அவற்றை சேமிக்க  உரிய வசதிகளை வழங்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஒரு ஆண்டுக்கு 1,800 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை அரசே விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்கிறது. இதன்மூலம் இந்த ஆண்டும் 5 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை  மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. 
ஆனால் இத்துடன் தமிழக விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக 2011 முதல் தற்போது வரை  ரூ.708 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. கிடங்கு அமைப்பதற்காக மட்டும் ரூ.1,450 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து பொருள்களையும் பாதுகாத்து பதப்படுத்தி விற்பனை செய்வதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.  நீங்கள் உங்களைப் பலப்படுத்தினால் மட்டுமே நாடு பலப்படும் என்றார் அமைச்சர் காமராஜ். 
முன்னதாக, உணவு உற்பத்தி துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்த புத்தகத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டார். நிகழ்வில், வேளாண் துறை முதன்மைச் செயலர்  ககன்தீப் சிங் பேடி,  இந்திய உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் சி.அனந்தராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com