சென்னை கடலில் அமெரிக்க காவல் படை கப்பல் ஸ்ட்ராட்டன்: 5 நாள்கள் கூட்டுப் பயிற்சி தொடக்கம்

இந்தியக் கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப் பயிற்சியில் அமெரிக்க  கடலோரக் காவல் படை கப்பலான ஸ்ட்ராட்டன்
கூட்டுப் பயிற்சியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினர்.
கூட்டுப் பயிற்சியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட இந்திய, அமெரிக்க கடலோரக் காவல் படையினர்.


இந்தியக் கடலோரக் காவல் படையினருடன் கூட்டுப் பயிற்சியில் அமெரிக்க  கடலோரக் காவல் படை கப்பலான ஸ்ட்ராட்டன் (Stratton) வெள்ளிக்கிழமை சென்னையில் ஈடுபட்டது. ஐந்து நாள்கள் பயிற்சிக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமை இக் கப்பல் திரும்பிச் செல்கிறது. 
சர்வதேச அளவில் கடலோரப் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளை வலுப்படுத்துவதற்காகப் பல்வேறு நாடுகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடலோரக் காவல்படையினரிடையே உள்ள பல்வேறு உத்திகள், திறன்களைப் பரிமாறிக்கொள்ளவும், தகவல், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொள்ளவும் இத்தகைய கூட்டுப் பயிற்சிகள் உதவிகரமாக உள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில்  தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, வியத்நாம் உள்ளிட்ட நாடுகளின் கடலோரக் காவல்படைகளோடு இந்திய கடலோரக் காவல் படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.    இந்நிலையில் முதல் முறையாக அமெரிக்க கடலோரக் காவல் படையினருடன் இணைந்து வெள்ளிக்கிழமை கூட்டுப் பயிற்சி நடைபெற்றது.  சென்னைக்கு அருகே நடைபெற்ற இப்பயிற்சியில்   அமெரிக்க கடலோரக் காவல்படை ரோந்துக் கப்பலான  ஸ்ட்ராட்டன் (Stratton)'   பங்கேற்றது.   மேலும் இந்திய கடலோரக் காவல்படை ரோந்து கப்பலான  சவுரியா(Sourya)' மற்றும் இரண்டு சிறிய கப்பல்கள் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றன. அப்போது கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வணிகக் கப்பலை மீட்பது,  கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்பது,  தீ விபத்தில் சிக்கும் கப்பலில் தீயை அணைத்து மாலுமிகளைக் காப்பாற்றுவது, கப்பல்களுக்கிடையே பொருள்களைப் பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

அமெரிக்க கப்பலுக்கு வரவேற்பு: ஒத்திகை நிகழ்ச்சிக்குப் பிறகு அமெரிக்க கடலோரக் காவல் படை கப்பல் ஸ்ட்ராட்டன்  வெள்ளிக்கிழமை மதியம் சென்னைத் துறைமுகத்துக்கு வந்தடைந்தது. அப்போது இந்திய கடலோரக் காவல் படை டி.ஐ.ஜி. சஞ்சீவ் திவான் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தனியார் பள்ளி மாணவர்கள் இரு நாட்டு கொடிகளை அசைத்து வரவேற்றனர். மேலும் கடலோரக் காவல் படை வாத்தியக் குழுவினர் மங்கள இசையெழுப்பினர். பின்னர் இந்திய முறைப்படி சந்தனம், குங்குமம், மலர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
முதன்முறையாக சென்னை வந்துள்ள அமெரிக்கப் படையினர் இந்தியப் படையினருடன் தொழில்நுட்பப் பயிலரங்கம், கலந்துரையாடல்கள், கூடைப் பந்து விளையாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.  இப்பயணம் குறித்து அமெரிக்க கப்பலின் கேப்டன் பாப் லிட்டில் கூறுகையில், இப்
பயிற்சியால் இரு நாடுகளுக்கிடையேயான உறவு வலுப்படும், இந்திய, பசிபிக் கடல் பகுதியில் கண்காணிப்பு வலுப்படும் என்றார். பயிற்சிக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்கக் கப்பல் தாய்நாடு திரும்புகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com