மோரீசஸுக்கு பயணமாகும் எம்.ஜி.ஆர். சிலை: அடுத்த மாதம் துணை முதல்வர் திறந்து வைக்கிறார்

சென்னையில் தயாராகியுள்ள மார்பளவு எம்.ஜி.ஆர்., சிலை வெள்ளிக்கிழமை மோரீசஸ் நாட்டுக்கு பயணமாகிறது. அங்குள்ள தமிழர் ஐக்கியம் என்ற இடத்தில் இந்தச் சிலை பீடத்துடன் நிறுவப்பட உள்ளது. சென்னை  தியாகராய நகர்
மோரீசஸ் நாட்டில் அமையவுள்ள எம்.ஜி.ஆர்., சிலையின் மாதிரி. (கோப்புப் படம்).
மோரீசஸ் நாட்டில் அமையவுள்ள எம்.ஜி.ஆர்., சிலையின் மாதிரி. (கோப்புப் படம்).


சென்னையில் தயாராகியுள்ள மார்பளவு எம்.ஜி.ஆர்., சிலை வெள்ளிக்கிழமை மோரீசஸ் நாட்டுக்கு பயணமாகிறது. அங்குள்ள தமிழர் ஐக்கியம் என்ற இடத்தில் இந்தச் சிலை பீடத்துடன் நிறுவப்பட உள்ளது. சென்னை  தியாகராய நகர் ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தின் முகப்பில் உள்ள அதே வடிவத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக, விழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
மோரீசஸ் நாட்டு அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி அண்மையில் சென்னை வந்தார். அவர், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தொடர்பான சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது, மோரீசஸ் நாட்டிலும் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவ முடிவெடுத்து அதற்கான ஒப்புதலை முதல்வர் பழனிசாமியிடம் கோரினார். இதற்கு ஒப்புதல் அளித்த முதல்வர், சிலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்படி  உத்தரவிட்டார். டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஏ.சி.சண்முகத்தின் முழு உதவியுடன் இந்தச் சிலை தயாராகி உள்ளது.
சென்னை ஆற்காடு தெருவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்ல முகப்பில் மார்பளவு எம்.ஜி.ஆர்., சிலை உள்ளது. தத்ரூபமாக உள்ள இந்தச் சிலையை தூண் செல்வராஜ் என்ற சிற்பி வடிவமைத்துள்ளார். அவரே மோரீசஸ் நாட்டில் வைக்கப்பட உள்ள சிலையையும் வடிவமைத்துத் தந்துள்ளார். இந்தச் சிலையானது 2.5 அடி உயரமும், அகலமும் கொண்டதாகும்.
எப்போது திறப்பு?: மார்பளவில் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., சிலையை மோரீசஸ் நாட்டுக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்கின்றனர். இந்தச் சிலையானது மோரீசஸ் நாட்டு அதிபரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அங்குள்ள தமிழர் ஐக்கியம் என்ற இடத்தில் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையானது வரும் செப்டம்பர் 29-இல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சிலையை துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் பெருமை: மோரீசஸ் நாட்டில் திருவள்ளுவர், பாரதியார், காந்தியடிகள், நேரு, ரவீந்திரநாத் தாகூர், பாரதிதாசன் உள்ளிட்டோருக்கு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்களின் வரிசையில் மோரீசஸில் யாருக்கும் சிலை அமைக்கப்படவில்லை. இந்த நிலையில், 1974-ஆம் ஆண்டு அந்த நாட்டுக்குப் பயணித்த எம்.ஜி.ஆருக்கு அங்கேயே சிலை வைக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com