தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் கைது

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை சாலை


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸார் கைது செய்யப்பட்டனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் தில்லியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். 
அதன்படி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். இதைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவன் வாயில் பகுதிகளில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
காலை 11 மணியளவில் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் அண்ணாசாலையில் மறியலில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாகப் புறப்பட்டனர்.  அப்போது, பொய் வழக்கு போடாதே, ப.சிதம்பரத்தை விடுதலை செய் போன்ற முழக்கங்களை எழுப்பியவாறு நகர்ந்தனர்.
சத்தியமூர்த்தி பவனில் இருந்து வெளியேறி திரு.வி.க.நகர் சாலை வர முயன்றதும், அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து சிலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனால், போலீஸார் அவர்களைக் கைது செய்ய முற்பட்டனர்.இதனால், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதன்பின், குமரிஅனந்தன், கிருஷ்ணசாமி, ராயபுரம் மனோ, கே.சிரஞ்சீவி, தமிழ்ச்செல்வன் உள்பட 150-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து ராயப்பேட்டையில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் வைத்திருந்தனர்.
பின்னர், அனைவரையும் விடுதலை செய்தனர். ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கடலூர் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸார் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
கராத்தே தியாகராஜன் ஆர்ப்பாட்டம்: ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது ஆதரவாளரும் முன்னாள் துணை மேயருமான கராத்தே தியாகராஜன் அடையாறில் அவர் இல்லத்துக்கு அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அவர் கூறியது: மத்திய அரசின் உள்துறை, பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ப.சிதம்பரம் வருவதைத் தடுக்கவே பாஜக இவ்வாறு செய்கிறது. ப.சிதம்பரத்தைக் கைது செய்திருக்கலாம், வழக்கு தொடர்ந்திருக்கலாம். ஆனால், தீவிரவாதிகள் போல கைது செய்து இருக்கக் கூடாது என்று கே.எஸ்.அழகிரி கூறுகிறார். அவர் மீது விரைவில்  வழக்கு வர உள்ளது. அதற்கு பயந்துதான் ப.சிதம்பரம் விவகாரத்தில் பின்வாங்குகிறார் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com