தமிழ்நாடு

வேளாண் பல்கலை. தரத்தை உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

23rd Aug 2019 02:09 AM

ADVERTISEMENT


வேளாண் பல்கலைக்கழகத்தின் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் தலைசிறந்த வேளாண் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் 33-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறது. 2017-ஆம் ஆண்டில் ஏழாவது இடத்தில் இருந்த இந்தப் பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டில் 33-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.
இதற்கு காரணம் அப்பல்கலைக்கழக நிர்வாகத்தின்  தன்னிச்சையான செயல்பாடுகளும், திறமையானவர்களை பல்கலைக்கழக நிர்வாகத்துக்குள் நுழைய அனுமதிக்காமல் தடை போடுவதும் தான் என்ற கருத்து வேளாண் விஞ்ஞானிகளிடையே நிலவுகிறது.  கோவை வேளாண் பல்கலை.யில் இயக்குநர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் போன்ற பதவிகளுக்கு வெளியாட்கள் எவரும்  விண்ணப்பிக்கவே முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தவறான அணுகுமுறையே வீழ்ச்சிக்கு முதல் காரணமாகும்.
தமிழகத்திலேயே மண் ஆய்வு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் வல்லுநர்கள் பலரும் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சேவை செய்யத் தயாராக உள்ளனர். ஆனால், உதவிப் பேராசிரியர் தவிர பிற உயர்பதவிகளுக்கு வெளியாட்களை நியமிப்பதில்லை என்ற பொருந்தாத விதியால் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தரமும், தரவரிசையும் சீரழிந்து கொண்டே செல்கிறது. 
இந்த நிலையை மாற்றி தகுதியும், திறமையும் உள்ள எவர் வேண்டுமானாலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் எந்தப் பதவியிலும் சேரலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT