வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

மரபணுசார் எலும்பு இறுக்க நோய்: 6 வயது சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

DIN | Published: 23rd August 2019 03:02 AM
மறுவாழ்வு பெற்ற 6 வயது  சிறுவன் சரவணன். உடன் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி, கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி உள்ளிட்டோர்.


மரபணு சார்ந்த அரிய வகை எலும்பு நோயால் பாதிக்கப்பட்ட ஆறு வயது சிறுவனுக்கு நவீன சிகிச்சை மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அச்சிறுவன் நலமாக இருப்பதாகவும், தாமாகவே நடப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பிரிட்டில் போன் எனப்படும் எலும்பு இறுக்க நோயானது, மரபணு சார்ந்த ஒன்றாகும். 10 ஆயிரத்தில் ஒன்று அல்லது இருவருக்கு பிறப்பிலேயே இந்த வகையான பாதிப்பு ஏற்படுவது உண்டு.
அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் உறுதித்தன்மையை இழந்துவிடும். இதனால் அவை எளிதில் வளையவோ அல்லது உடையவோ கூடும். இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் நடக்கவோ, பிறரைப் போல இயல்பாக நடமாடவோ இயலாது. அதனைக் குணப்படுத்த உயர் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்
இந்நிலையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் சரவணனுக்கு அந்தப் பாதிப்பு இருந்தது. பிறப்பிலேயே அது கண்டறியப்பட்டதால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
முதல் 5 ஆண்டுகளுக்கு மருந்துகள், மாத்திரைகள் மூலமாக எலும்பு வலுவாக்கப்பட்டன. அதற்கிடையே இரு முறை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டும், கால்களில் கம்பிகள் பொருத்தப்பட்டும் எலும்புகள் நேராக்கப்பட்டன.
அதனுடன் பல்வேறு பயிற்சிகளும் அச்சிறுவனுக்கு அளிக்கப்பட்டன. அதன் பயனாக, தற்போது எந்த துணையும் இன்றி தாமாகவே அவர் நடக்கிறார். அவரது எலும்புகளின் ஸ்திரத்தன்மையும் சீராக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற சிகிச்சைகளுக்கு ஏறத்தாழ ரூ.10 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அந்த சிகிச்சைகள் அச்சிறுவனுக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
இந்தச் சந்திப்பின்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, சிறுவனுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தீன் முகம்மது இஸ்மாயில், பசுபதி சரவணன் , ராஜ் கணேஷ் , சுரேஷ்பாபு,  சரத் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

எதிர்த்து கேள்வி கேட்டால் ஏறி மிதிப்பதா? மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆவேசம்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீஸார் விசாரணை
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து திமுக குரல் கொடுக்கும்: சுப்புலட்சுமி ஜெகதீசன்
​மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன: ஜவாஹிருல்லா