தமிழ்நாடு

நளினிக்கு மேலும் 3 வாரங்கள் பரோல்: உயர்நீதிமன்றம் உத்தரவு

23rd Aug 2019 02:40 AM

ADVERTISEMENT


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை, மேலும் 3 வார காலம் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக 6 மாதம் பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது சிறை விதிகளின்படி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்குவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இந்த நிலையில், நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் முடிந்து வரும் 25-ஆம் தேதி சிறைக்குச் செல்ல வேண்டும். இந்த நிலையில், தனக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் வழங்க கோரி நளினி, தமிழக சிறைத்துறைக்கு கொடுத்த கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், எங்களது உறவினர்கள் பலர் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து செப்டம்பர் முதல் வாரத்தில் தான் வருகின்றனர். அவர்கள் வந்த பின்னர் தான் மாப்பிள்ளை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பேச முடியும். எனவே, மேலும் 30 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞர் அய்யப்பராஜ், மேலும் 30 நாள்கள் பரோல் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். அதனை எதிர்த்து நளினி தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், மனுதாரரின் மேல்முறையீட்டு மனுவை வரும் 25-ஆம் தேதிக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதா, மனுதாரர் பரோலில் இருந்தபோது விதிகளை மீறும் வகையில் ஏதேனும் செயல்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச்சாட்டுகள் உள்ளதா என கேள்வி எழுப்பினர். அப்போது அரசு குற்றவியல் வழக்குரைஞர், மேல்முறையீட்டு மனுவை வரும் 25-ஆம் தேதிக்குள் பரிசீலிக்க வாய்ப்பு இல்லை எனவும், மனுதாரர் நளினி மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை எனவும் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், மகளின் திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நளினி கூறுவதால், அவருக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் 3 வார காலம் நீட்டித்து வழங்குவதாகக் கூறி உத்தரவிட்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT