தமிழ்நாடு

சந்திரயான்-3 அனுப்பவும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

23rd Aug 2019 02:06 AM

ADVERTISEMENT


சந்திரயான்-2 திட்ட வெற்றிக்குப் பின்னர், நிலவில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள சந்திரயான்-3 அனுப்பும் திட்டத்தையும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மேற்கொள்ள உள்ளதாக அதன் தலைவர் சிவன் கூறினார்.

சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை காலை வந்த சிவன் அளித்த பேட்டி:
நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைக்கப்பட்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலம் இப்போது, நிலவின் நீள்வட்டப் பாதையில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அடுத்து வரும் நாள்களில் இந்த நீள்வட்டப் பாதை, சுற்றுவட்டப் பாதையாக மாற்றப்படும். அதன் பிறகு, செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு, தரையிறக்குவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கும். இந்த முயற்சி தொடங்கப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில், அதாவது 1.55 மணிக்கு விண்கலம் நிலவின் பரப்பில் தரையிறங்கும்.

இது உலக அளவில் மிக முக்கியமான நிகழ்வாக இருக்கும். அனைவரும் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.
விண்கலம் தரையிறங்கும்போது, விநாடிக்கு 1.6 கி.மீ. வேகத்தில் லேண்டர் சுற்றி வந்துகொண்டிருக்கும். அந்த வேகத்தை 0 கி.மீ. அளவுக்குக் குறைத்து, அதிலுள்ள புதிய சென்சார்களை செயல்பாட்டுக்கு கொண்டுவருதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வர்.
விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை தரைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி நேரில் காண வருமாறு பிரதமருக்கு இஸ்ரோ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நிச்சயம் வருவாரா என்பதை இப்போதே கூற இயலாது.

பெண் விஞ்ஞானிகள்: இஸ்ரோவில் ஆண், பெண் விஞ்ஞானிகள் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. சந்திரயான்-2 திட்டத்தில் இரண்டு பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. எனவே, எந்தவித வித்தியாசமும் இன்றி ஆண்-பெண் விஞ்ஞானிகளின் திறமையின் அடிப்படையில் வாய்ப்பு அளிக்கப்படும். சில திட்டங்களுக்கு பெண் விஞ்ஞானிகள் தலைமை வகிக்கவும் வாய்ப்பு உள்ளது.
சந்திரயான்-2 வெற்றிக்குப் பிறகு, நிலவில் அடுத்தக்கட்ட ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-3 அனுப்பும் திட்டம், வெள்ளிக் கோளை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பும் திட்டம் எனத் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது என்றார் அவர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT