தமிழ்நாடு

கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

23rd Aug 2019 01:02 AM

ADVERTISEMENT


கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில், தண்ணீர் அதிகப்படியாக கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வியாழக்கிழமை வனத்துறை தடை விதித்தது.

தமிழகத்தில்  உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொல்லிமலை. கடந்த சில மாதங்களாக மழையின்றி அருவிகள் காய்ந்து பாறைகளாக தென்பட்ட நிலையில், தற்போது அங்கு பரவலாக மழை பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள முக்கிய அருவிகளான  ஆகாய கங்கை,  மாசில்லா அருவி,  நம் அருவியில்  தண்ணீர் அதிகமாகக் கொட்டுகிறது.   ஒரு வாரமாக மாலை, இரவு நேரங்களில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 

 ஆண்டுதோறும்  ஜூலை முதல் ஜனவரி வரையில் கொல்லிமலையில் குளு குளு சீசனையும்,  அருவிகளில் தண்ணீர் வரத்தையும் அதிகமாக காண முடியும்.  சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இந்த மாதங்களில் அதிகம் இருக்கும்.  
சில தினங்களுக்கு முன் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை அனுமதி வழங்கியது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் 1,300 படிகளைக் கடந்து சென்று நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.  பலர் தங்களது செல்லிடப்பேசி முலம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

இந்த நிலையில்,   இரு நாள்களாக கொல்லிமலையில் மழையின் தாக்கம் அதிகம் உள்ளது.  இதனால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வியாழக்கிழமை காலை வனத்துறை தடை விதித்தது.  இதனால் அருவிகளில் குளிக்க ஆர்வமுடன் வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதேவேளையில்,  நம் அருவி, மாசில்லா அருவிகளில் குளிக்க எவ்விதத் தடையும் இல்லாததால்,  அங்கு சென்று சுற்றுலாப் பயணிகள் குளித்து விட்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

இது குறித்து கொல்லிமலை வனச் சரகர் அறிவழகன் கூறியது:  ஓரிரு நாள்களாக  மழை அதிகம் பெய்வதால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளது. இதனை, வெள்ளப்பெருக்கு என்று கூற முடியாது.  சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து விட்டு தேவையற்ற பிரச்னைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் அங்கு செல்லத் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளோம்.   நம் அருவி, மாசில்லா அருவி, ஊரக வளர்ச்சித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது.  ஆகாய கங்கை மட்டும் தான் வனத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த அருவிகளில் குளிக்க எவ்வித தடையுமில்லை என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT