டெங்கு பாதிப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக ஏற்பட்டு வரும் நிலையில், சில முக்கிய அறிவுறுத்தல்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு


டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக ஏற்பட்டு வரும் நிலையில், சில முக்கிய அறிவுறுத்தல்களை உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.
அதன்படி, கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் சாலையோரங்களில் பயனற்று கிடக்கும் காலி டப்பாகள், டயர்கள், தேங்காய் மூடிகள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரிகளில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நோய் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும், போதிய அளவிலான மருந்துகளும், மாத்திரைகளும் மாவட்ட மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஏடிஸ் - எஜிப்டை வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை  7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நாட்டிலேயே கர்நாடகத்தில்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு 1,400-க்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அதற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. கடந்த 7 மாதங்களில் மட்டும் மாநிலத்தில் 1,300-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களில், சென்னையில் 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதையடுத்து, மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக உள்ளாட்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் அதிகாரிகளுடன் சுகாதாரத் துறை அதிகாரிகள் அண்மையில் ஆலோசனை நடத்தினர். அப்போது, பயனற்ற பொருள்களை முறையாக அகற்ற வேண்டும் என்றும் அதில் மழைநீரை தேங்கவிடக் கூடாது என்றும் சுகாதாரத் துறையினர் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கன்வாடி அமைப்புகள், பள்ளிகள், ஊராட்சிப் பகுதிகளில் டெங்கு ஒழிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com