கணினி ஆசிரியர் தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கணினி ஆசிரியர்களுக்கான நடைபெற்ற தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரிய வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை ஒத்திவைத்தது.


கணினி ஆசிரியர்களுக்கான நடைபெற்ற தேர்வு முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கோரிய வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை ஒத்திவைத்தது.
கடந்த மார்ச் 1 -ஆம் தேதி, கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான இணையதளத்தில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி கடந்த ஜூன் 23 -ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இதில் தென்காசி ஆலங்குளத்தில் உள்ள புனித மரியம் பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்விற்கான மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு தேர்வு தொடங்குவதற்கு  முன் சிலர் செல்லிடப்பேசி மூலம் வினாத்தாளைப் பிறருக்கு பகிர்ந்து கொண்டிருந்தனர். இதனால் வினாக்கள் தேர்வுக்கு முன்னதாகவே வெளியானது. மேலும் அந்த மையத்தில் போதிய கணினி வசதி இல்லை. இந்நிலையில் ஜூன் 24 -ஆம் தேதி ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில்,  இணையசேவை பாதிக்கப்பட்டதால் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு 2 -ஆம் கட்டமாக ஜூன் 27 -ஆம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 
மேலும் 2 வகை வினாக்களுக்குத் தேர்வு எழுதினால் தேர்வின் தரம் பாதிப்பதுடன், தேர்வு முடிவுகளிலும் குளறுபடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நடைபெற்ற இரு தேர்வுகளுக்குமான முடிவை அறிவிக்க இடைக்காலத் தடை விதித்தும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஆசிரியர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும், நடைபெற்ற இரு தேர்வினையும் ரத்து செய்து, முறையான மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனத் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த செந்தில்முருகன், நிவேதா  உள்ளிட்ட 4 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிடப்பட்டிருந்தது. 
இந்நிலையில் இந்த மனு,  நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் இதுகுறித்து பதிலளிக்கக் காலஅவகாசம்  கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com