ஊழல் செய்பவர்கள் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும்: பிரேமலதா

ஊழல் செய்பவர்கள் தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என  தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.
ஊழல் செய்பவர்கள் தண்டனையை அனுபவிக்கத்தான் வேண்டும்: பிரேமலதா


ஊழல் செய்பவர்கள் தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என  தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீதான வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
சென்னை சாலிகிராமத்தில் அபுசாலி சாலையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்தப் பகுதிக்கு புதன்கிழமை கட்சித் தொண்டர்களுடன் வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா சாலை சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா அளித்த பேட்டி:
கழிவுநீர் கால்வாய்ப் பணி இந்தப் பகுதியில் 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் குப்பை அள்ளக்கூடிய லாரிகள் தெருக்களுக்குள் வர முடியவில்லை. இதன் காரணமாக குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் இப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய்த் தொற்றும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்தப் பகுதி மக்களோடு நாங்கள் வசித்து வருவதால் கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து இந்த சாலையைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டோம். 
விரைவில் இங்கு தார்ச் சாலை அமைத்துத் தரப்பட வேண்டும். மாநிலம் முழுவதும் இதுபோன்ற மக்கள் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தவேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து அவர் கூறியது: ஊழல் செய்தவர்கள் தண்டனையை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பல ஆண்டுகளாக மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரம், தமிழகத்துக்கு எந்தவொரு பெரிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை. மாறாக ஊழல் வழக்கில்தான் சிக்கியிருக்கிறார். அவர் தவறு செய்திருந்தால், அதற்கான தண்டனையை பெற்றுத்தான் ஆகவேண்டும். இதில் யாரும் விதிவிலக்கல்ல.
பால் விலை உயர்வைப் பொருத்தவரை, ஒரே நேரத்தில் லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தியிருப்பது மக்களை கடுமையாகப் பாதித்திருக்கிறது. 
மக்களை பாதிக்காத வகையில் பால் விலை உயர்வை தமிழக அரசு படிப்படியாக மேற்கொண்டிருக்கவேண்டும். முதலில் லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு உயர்த்தி, பின்னர் இரண்டாம் கட்டமாக மீண்டும் ரூ. 3 அளவுக்கு உயர்த்தியிருக்கலாம். 
டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் இந்த அரசு நடைபெற்று வருகிறது. முந்தைய திமுக அரசும் மது விற்பனை வருமானத்தை நம்பித்தான் இயங்கி வந்தது. புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் அனைவரும் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார் பிரேமலதா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com