முதியவர்களை குறிவைக்கும் கொள்ளையர்கள்! தப்பிப்பது எப்படி?

கிராமப்பகுதிகளில் வேலை மற்றும் படிப்புக்காக பிள்ளைகள் வெளியூருக்குச் செல்லும் போது, பெற்றோர்கள் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. 
முதியவர்களை குறிவைக்கும் கொள்ளையர்கள்! தப்பிப்பது எப்படி?

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே கொள்ளையர்களை போராடி விரட்டி அடித்த நெல்லை தம்பதி குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. மேலும், அவர்களின் வீரச் செயலருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தன.

திரையுலக பிரபலங்களும் பலர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நெல்லை தம்பதியின் செயலை பாராட்டி, வீர தீரச் செயலுக்கான விருது வழங்கி தமிழக அரசு கௌரவித்தது. 

தற்போது இதேபோன்ற ஒரு சம்பவம் தஞ்சையில் நிகழ்ந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு பகுதியைச் சேர்ந்த பழனியப்பன்- இந்திரா தம்பதியினர் நேற்று ஒரு திருமண விழாவிற்குச் சென்றுள்ளனர். அவர்களது வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பர்க்லர் அலாரம் மூலமாக குறுஞ்செய்தி கிடைத்தது.

உடனே வீட்டிற்கு விரைந்த அவர்கள், வீட்டின் வெளியே இருந்த கேட் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  உள்ளே செல்ல முற்பட்ட போது, வீட்டினுள் இருந்து கொள்ளையன் வெளியே ஓடி வந்துள்ளான். தம்பதியினர் இருவரும் சேர்ந்து கொள்ளையனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவலர்கள் கொள்ளையனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்ந்து, இரண்டாவது முறையாக இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, வயதானவர்களை குறிவைத்து கொள்ளையர்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவது தெளிவாகவே தெரிகிறது. வயதானவர்கள் எதிர்த்து சண்டையிட அவர்களிடம் திறன் இருக்காது என்று கருதி கொள்ளையர்கள் முதியவர்கள் இருக்கும் வீடுகளை தேர்வு செய்வதாகவே கருதப்படுகிறது. 

கிராமப்பகுதிகளில் முதியவர்கள் தனியாக இருப்பது என்று பொதுவாக காணப்படும் ஒரு விஷயம் தான். வேலை மற்றும் படிப்புக்காக பிள்ளைகள் வெளியூருக்குச் செல்லும் போது, பெற்றோர்கள் தனியாக இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதிலும், ஊருக்கு வெளியே ஒதுக்குபுறமாக இருக்கும் வீடுகள் கொள்ளையர்களுக்கு ஜாக்பாட் தான்.  

முதியவர்கள் வெளியே செல்லும் போது, அந்த தருணத்தை தான் கொள்ளையர்கள் பயன்படுத்துகின்றனர். எனவே, இதனைத் தடுக்க தமிழக காவல்துறை தொடர்ந்து சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. 

முதியவர்கள் தனியாக இருக்கும் வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தற்போது சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலமாக பெரும்பாலான குற்றச் சம்பவங்கள் முடிவுக்கு வந்துள்ளன. ஓரளவுக்கு குற்றங்களும் குறைக்கப்பட்டுள்ளன. எனவே, அனைத்து வீடுகளிலும் சிசிடிவி கேமராவை பொருத்தலாம். மேலும், தற்காப்புக் கருவிகளையும் பொதுவான ஒரு இடத்தில் வைத்திருக்கலாம். 

மாளிகைக்கடைக்காரர், மெக்கானிக், சிலிண்டர் டெலிவரி செய்பவர் உள்ளிட்டோரை முடிந்த வரை வீட்டிற்குள் அனுமதிப்பதை தவிர்க்கலாம். உங்களது வீட்டில் எவ்வளவு பணம் உள்ளது, எவ்வளவு சொத்துகள் உள்ளது போன்ற விபரங்களையும் அவர்களிடம் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. நம்பிக்கைக்கு உரியவர்கள் தவிர யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். 

பெண்கள் வெளியே செல்லும் போது வீட்டில் உள்ள அனைத்து நகைகளையும் அணிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடலாம். 

பர்க்லர் அலாரம் போன்ற எச்சரிக்கைக் கருவிகளையும் வீட்டில் பொருத்தலாம். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களில் இதனை பொருத்தும் போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டால் உங்களுக்கு உடனடியாக எச்சரிக்கை செய்தி வந்துவிடும். பின்னர் காவல்துறைக்கு உடனே தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம்.

அதேபோல சந்தேகத்திற்குரிய நபர் உங்கள் வீட்டின் முன்பாக நடமாடினாலும் காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள். காவல்துறையின் 'காவலன்' மொபைல் செயலியை பயன்படுத்தி பயன் பெறலாம். அதில், நீங்கள் ஒரு செய்தி அனுப்பினாலே அடுத்த சில நிமிடங்களில் காவல்துறை உங்களது வீட்டிற்கு விரையும். 

இது அனைத்தையும் மீறி எதிர்பாராதவிதமாக கொள்ளையர்களை எதிர்கொள்ள நேர்ந்தால், உடல் வலிமை இல்லாவிட்டாலும் மன வலிமையோடு போராடி அவர்களை அடித்து விரட்டுங்கள். நெல்லை மற்றும் தஞ்சை தம்பதியினரை போல.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com