ஆசிரியர் தகுதித் தேர்வில் 1% தேர்வர்களே தேர்ச்சி! என்ன காரணம்?

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். 
ஆசிரியர் தகுதித் தேர்வில் 1% தேர்வர்களே தேர்ச்சி! என்ன காரணம்?

கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அதன்படி, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இருந்து தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் 2013ம் ஆண்டிற்கு பிறகு தேர்வுகள் முறையாக நடத்தப்படாமல் இருந்து வந்தது. பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் தொடர்ந்த வழக்கின் காரணமாகவே கடந்த சில ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை என்று ஆசிரியர்கள் தகுதித் தேர்வு வாரியம் காரணம் தெரிவித்தது.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக தேர்வு நடத்தப்படாத சூழ்நிலையில், இந்தாண்டு கண்டிப்பாக தேர்வு நடத்த வேண்டும் என்று சில தேர்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்தாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், இந்த ஆண்டு கடந்த ஜூன் 8, 9-ஆம் தேதிகளில் முறையே முதல் தாள், இரண்டாம் தாள் என ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் தாள் தேர்வை 1 லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினர் . இரண்டாம் தாள் தேர்வை 3 லட்சத்து 79ஆயிரத்து 733பேரும் எழுதி இருந்தனர். 

இரண்டு தேர்வுகளும் 150 கேள்விகளைக் கொண்டது. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கொள்குறிவகையில் அமைக்கப்பட்டிருக்கும். 3 மணி நேரம் தேர்வு நடைபெறும். இதில், பொதுப்பிரிவினர் 90 மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டு பிரிவினர் 82 மதிப்பெண்களும் பெற வேண்டும். 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்க முதல் தாளிலும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் எடுக்க இரண்டாம் தாளிலும் வெற்றி பெற வேண்டியது அவசியம். 

தேர்வுகள் முடிவடைந்த நிலையில், இரண்டு தேர்வுகளின் முடிவுகளும் நேற்று இணையத்தில் வெளியிடப்பட்டது. இரண்டு தேர்வுகளிலும் 1 சதவீதம் தேர்வர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தது ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதல் தாள் தேர்வில் சுமார் 480 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியவர்களில் ஒருவர் அதிகபட்சமாக 99 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். குறைந்தபட்சமாக 1 மதிப்பெண் பெற்றவர்களும் உள்ளனர். 

சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த இந்தத் தேர்வில் தேர்ச்சி விகிதம் எதிர்பாராத அளவில் குறைய காரணம் என்ன, என்று தேர்வு எழுதியவர்கள் மற்றும் கல்வியாளர்களை கேட்கும் போது சில தகவல்கள் தெரிய வந்துள்ளது. 

வழக்கமாக இல்லாமல் இந்த முறை தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறுகின்றனர். கொள்குறி வகையில் முன்னதாக நேரடியாக கேள்விகள் இருக்கும். இந்த முறை கேள்விகள் மிகவும் நீளமானதாகவும், ஆராய்ந்து பதில் அளிக்கும்படியும் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.  முக்கியமாக, சைக்காலஜி மற்றும் தமிழ் பகுதியில்கூட இந்த முறை கேள்விகள் யோசித்து பதில் அளிக்கக் கூடியதாகவும், எதிர்பார்த்த கேள்விகள் எதுவும் வரவில்லை என்றும் கூறினர். 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பணி புரிய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. மேலும், இதுதவிர தற்காலிக ஆசிரியர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணியில் நீடிக்க முடியும் என்றும் அரசு கூறியுள்ளது. இதன் காரணமாக இந்த முறை கேள்வித்தாள் கடினமாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். 

அதே நேரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், விடைத்தாளில் சில அடிப்படை விபரங்களை கூட சில தேர்வர்கள் சரியாக நிரப்பவில்லை. விடைத்தாளில் விடைகளை சரியாக குறியீடு செய்யவில்லை. வினாத்தாளின் எண்ணை விடைத்தாளில் குறிப்பிடவில்லை. கேள்வித்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் நிலையில், ஏதாவது ஒரு மொழியை விடைத்தாளில் தெரிவு செய்ய வேண்டும். ஆனால், அதையும் பலர் முறையாக குறிப்பிடவில்லை. 

அதுபோன்று, சிலர் குறுக்கு வழியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில், வினாத்தாள்களின் எண்களை விடைத்தாளில் குறிப்பிடவில்லையோ என்று தோன்றுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான விடைத்தாள்களில் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் பதவிக்கு தேர்வு எழுதும் தேர்வர்கள், அடிப்படை விபரங்களை கூட தெளிவாக குறிப்பிடாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடக்கிறதா என்பது குறித்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் ஆய்வு செய்ய இருக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது 1 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள தொடக்கக்கல்வி வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு ஆயிரக்கணக்கிலே காலிப்பணியிடங்கள் உள்ளன. தேர்ச்சி பெற்றவர்கள் அதைவிட குறைவு என்பதால் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com