வாணியம்பாடி அருகே மர்ம வெடிச்சப்தம்: பொதுமக்கள் அச்சம்

வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி பகுதிகளில் காதைப் பிளக்கும் அதிபயங்கர மர்ம வெடிசப்தம் ஏற்பட்டதால் திங்கள்கிழமை பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். 


வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி பகுதிகளில் காதைப் பிளக்கும் அதிபயங்கர மர்ம வெடிசப்தம் ஏற்பட்டதால் திங்கள்கிழமை பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். 
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் திங்கள்கிழமை காலை 11.25 மணியளவில் காதைப் பிளக்கும் பயங்கர மர்ம வெடி சப்தம் கேட்டது.  அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அந்த சப்தம் எங்கிருந்து, எப்படி ஏற்பட்டது என்று தெரியாததால் குழம்பினர். 
வாணியம்பாடி, செட்டியப்பனூர், புத்துக்கோயில், பொன்னேரி, மண்டலவாடி, சின்ன மோட்டூர், நெக்குந்தி, மல்லகுண்டா மற்றும் சுற்றியுள்ள 20 கி.மீ தொலைவு வரையிலும் சப்தம் கேட்டதால் மக்கள் அச்சம்  அடைந்தனர். 
நாட்டறம்பள்ளி பகுதியில் பிற்பகல் 2 மணியளவில் அதிக வெடி சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.  
விண்கல் மோதியதால் ஏற்பட்ட சப்தமா?: 
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பட்டு பகுதியில் அதிக சப்தத்துடன், அங்குள்ள தனியார் நிலத்தில் சிறிய பள்ளம் ஏற்பட்டது. இச்சப்தமும் பல கிலோமீட்டர் சுற்றுப்பரப்பில் உள்ள பொதுமக்களால் உணரப்பட்டது. இதேபோன்று 2016 பிப்ரவரி 6-ஆம் தேதி நாட்டறம்பள்ளி தனியார் பொறியியல் கல்லூரி பகுதியில் விண்ணிலிருந்து அதிவேகமாக வந்து விழுந்த விண்கல் பயங்கர  சப்தத்துடன் வெடித்து சிதறியதில் கல்லூரி பேருந்து ஓட்டுநர் காமராஜ் என்பவர் படுகாயமடைந்து இறந்தார். 
இதுகுறித்து ஹைதராபாத் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு செய்து மோதியது விண்கல் தான் என்பதை 
உறுதிப்படுத்தினர். 
மேலும், அங்கிருந்து 4.9 செ.மீ அகலம் கொண்ட விண்கல்லை மீட்டு ஆராய்ச்சிக்கு எடுத்துச் சென்றனர். இதே போன்று, சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலகிரி மலையடிவாரத்தில் பயங்கர சப்தம் ஏற்பட்டடு, அங்கு சிறு, சிறு இரண்டு பள்ளங்கள் ஏற்பட்டு குளம் போல் தண்ணீர் தேங்கியது.
 இந்நிலையில் திங்கள்கிழமை காலை வாணியம்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பயங்கர மர்ம வெடி சப்தம் கேட்ட நிலையில், ஏதேனும் விண்கல், நிலத்தின் மீது மோதியதால் ஏற்பட்ட சப்தமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே,  இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் ஆய்வாளர்கள் மூலம் இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com