தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட பேருந்து முனையம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

 தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 
சேலம் மணியனூர் பகுதியில் திங்கள்கிழமை புதிய சட்டக் கல்லூரியைத் தொடக்கி வைக்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், 
சேலம் மணியனூர் பகுதியில் திங்கள்கிழமை புதிய சட்டக் கல்லூரியைத் தொடக்கி வைக்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், 


 தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் 66 ஏக்கரில் பிரம்மாண்ட பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 
சேலம் அரசு சட்டக் கல்லூரி துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.  புதிய சட்டக் கல்லூரியைத் திறந்து வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: 
தமிழகத்தில் ஆண்டுதோறும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் புதியதாக சேலம், நாமக்கல், தேனி என 3 சட்டக் கல்லூரிகள் துவக்க உத்தரவிடப்பட்டது.  ஒவ்வொரு கல்லூரிக்கும் ஆரம்பப் பணிகளுக்கு ரூ.3.17 கோடி என மொத்தம் ரூ.9.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,  மூன்று கல்லூரிகளுக்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை,  திருநெல்வேலி சட்ட கல்லூரிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கூடுதல் வகுப்பறை கட்ட ரூ.7.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் மொத்தம் 13 சட்டக் கல்லூரிகள் உள்ளன.  இவற்றில் 11 அரசு சட்டக் கல்லூரிகளாக உள்ளன. தருமபுரி, விழுப்புரம், ராமநாதபுரம் சட்டக் கல்லூரிகளுக்கு கட்டப்பட்டு வரும் சொந்தக் கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு,  பயன்பாட்டுக்கு வரும். 
தமிழக அரசின் இடைவிடாத முயற்சி காரணமாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேலும்,  உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாககக் கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க வசதிக்காக 1,188 காலிப் பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.  
சேலம் மாநகரப் பகுதி அதிக பாலங்கள் கட்டப்பட்ட நகரமாகத் திகழ்கிறது.  சீலநாயக்கன்பட்டி பாலத்தை விரிவாக்கிட கோரிக்கை பெறப்பட்டுள்ளது.  விரைவில் சீலநாயக்கன்பட்டி பாலத்தை விரிவாக்கி, நெரிசல் இல்லாத பகுதியாக மாற்றப்படும். சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அரபி கல்லூரி அருகே 66 ஏக்கரில் மிக பிரம்மாண்டமான பேருந்து முனையம் (பஸ் போர்ட்)  தமிழகத்தில் முதல் முறையாக சேலத்தில் அமைக்கப்பட உள்ளது. சேலத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ. 948 கோடி மதிப்பில் குடிநீர் வழங்க ரூ.165 கோடியும்,  பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளுக்கு ரூ.145 கோடியும், ரூ.92 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. 
ஓராண்டில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும்: தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள அரசு சட்ட கல்லூரிக்கு சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அண்ணபூர்ணா கல்லூரி அருகே புதிய கட்டடம் ஓராண்டில் கட்டி திறக்கப்படும். திருமணிமுத்தாறில் கழிவுநீரைச் சுத்திகரிக்க ரூ.100 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
விழாவில்,  சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ,  வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  சட்டத் துறை செயலர் சி.கோபி ரவிகுமார், ஆட்சியர் சி.அ.ராமன், சட்டக் கல்லூரி தனி அலுவலர் கோபாலகிருஷ்ணன்,  மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன்,  எம்எல்ஏ-க்கள் செ.செம்மலை, ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com