கிறிஸ்துவ நிறுவனங்கள் மீதான கருத்தை திரும்பப் பெற்றது சென்னை உயர் நீதிமன்றம்

கிறிஸ்துவ நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் கருதுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து திரும்பப் பெறப்பட்டது.
கிறிஸ்துவ நிறுவனங்கள் மீதான கருத்தை திரும்பப் பெற்றது சென்னை உயர் நீதிமன்றம்

கிறிஸ்துவ நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் கருதுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து திரும்பப் பெறப்பட்டது.

வழக்குக்கும், கருத்துக்கும் பொருத்தமில்லை என முறையீடு செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் தனது கருத்தை திரும்பப் பெற்றார்.

மேலும், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் கூறிய கருத்தையும் அவர் திரும்பப் பெற்றார்.

கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என பெற்றோர்கள் மத்தியில் பொதுவான ஒரு கருத்து நிலவி வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அந்த கருத்தை நீதிபதி திரும்பப் பெற்றுக் கொண்டார்.

கல்லூரி மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது, மேற்கண்டவாறு அரசுக்கு பரிந்துரைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பயிலும் விலங்கியல் துறை மாணவ-மாணவிகள் கடந்த ஜனவரி மாதம், கர்நாடக மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட  பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்றனர். 

சுற்றுலாவுக்குப் பின்னர் சென்னை திரும்பிய கல்லூரி மாணவிகள், சுற்றுலாவின்போது உடன் வந்த இரண்டு பேராசிரியர்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.

கல்லூரி மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின்படி பணிநீக்கம் செய்வது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் பேராசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியது. 

இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் டென்னிசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில், தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்காமல், இயற்கை நீதி மீறப்பட்டதாகக் கூறி வாதிடப்பட்டது. அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டு விட்டதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், கல்விச் சுற்றுலாவுக்கு 46 பேர் சென்றுள்ளனர். சுற்றுலா சென்ற 34 மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். 

மனுதாரர் மீதும் மற்றொரு பேராசிரியர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மாணவிகள் கொடுத்த வாக்குமூலங்கள் அனைத்து ஒன்றாகவே உள்ளன.  இதன்படி பேராசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதில் தவறேதும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். 

இருப்பினும் பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் குறித்தும், அவை சில நேரங்களில் அப்பாவி ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவது குறித்தும் நீதிபதி சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் கூறியது:  பெண்களைப் பாதுகாக்க ஏராளமான சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்தச் சட்டங்கள் எல்லா நேரங்களிலும் நியாய முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி உள்ளது. 
சில நேரங்களில் ஆண்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் இந்தச் சட்டங்கள் பெண்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணம் வரதட்சிணை கொடுமை சட்டம்.  இந்தச் சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். 

எனவேதான் இந்த சட்டங்களைத் தவறாக பயன்படுத்துவதை சட்ட தீவிரவாதம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.  எனவே, இந்தச் சட்டங்களை பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சரியான தருணம் இது.  

அரசு உரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து அப்பாவி ஆண்களை பாதுகாக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com