காஷ்மீர் விவகாரம்: ஆக.22-இல் தில்லியில் எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 22-ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக


காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆகஸ்ட் 22-ஆம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
அமைதி திரும்புகிறது என்று கூறிக் கொண்டே ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து, தொலை தொடர்புகளைத் துண்டித்து, காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை செயல்படுத்தப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
 காஷ்மீரத்துச் சிங்கம் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஷேக் அப்துல்லாவின் மகன் ஃபரூக் அப்துல்லா தனது 83-ஆவது வயதிலும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர். 
அதேபோல் அவரது மகன்  உமர் அப்துல்லா, இன்னொரு முன்னாள் முதல்வர்  மெகபூபா முப்தி ஆகியோர் ஜனநாயகத்தின் குரலாக நின்று காஷ்மீர் மக்களுக்கு அரும்பணியாற்றியவர்கள். இவர்கள் அனைவரையும் இன்றோடு  14 நாள்களுக்கும் மேலாக கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்து அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் மத்திய பாஜக அரசு பறித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமலேயே காஷ்மீர் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, காஷ்மீர் மாநில சட்டப்பேரவை இல்லாமலேயே நாடாளுமன்றத்தில் மசோதாக்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி, காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து வைத்துள்ளது பாஜக அரசு.
 1947-இல் இருந்து இந்தியாவின் ஓர் அங்கமாக இருந்த காஷ்மீரை இன்றைக்கு அடக்குமுறைகள், ஊரடங்கு உத்தரவுகள் மூலம் மத்தியில் உள்ள பாஜக அரசு தனிமைப்படுத்தி வைத்திருக்கிறது. 
ஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கையைக் கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றத் துடித்து, இப்போது காஷ்மீர் பிரச்னையைச் சர்வதேசப் பிரச்னையாக்கி விட்டது. இந்தியாவைக் கட்டிக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திலும்  பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இது எடுத்துரைக்கிறது.
எனவே, கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரத்துத் தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி  ஆகஸ்ட் 22-ஆம் தேதி  காலை 11 மணி அளவில் புதுதில்லி ஜந்தர் மந்தரில்  ஜனநாயகத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com