கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏராளம்

கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.
கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏராளம்


கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மதுரை  உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் இளந்தமிழர் இலக்கியப் பட்டறையின் 2-ஆம் நாள் அமர்வில் தமிழ் வாழ்க்கைப் பணி என்ற தலைப்பில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியது: மத்திய அரசு வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி, 2001 மற்றும் 2011-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது ஆறுதலான விஷயமாக உள்ளது. மொழியின் வளர்ச்சிக்கு புதிய சொற்கள் அவசியம். உலகளவில் எந்த மொழிச் சொற்களாக இருந்தாலும், அதற்கு இணையான ஆங்கிலச் சொல் உடனடியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழ் மொழியில் புதிய சொற்களை உருவாக்கும் முயற்சியாக சொற்குவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகளவில் 20 சதவீதத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை கலை படிப்புகள் தான் அளித்து வருகின்றன. கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு படைப்புத் திறன் சார்ந்த கலைத் துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.  அவற்றைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது தான் அவசியமாக உள்ளது என்றார்.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன், மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் ஒளவை ந.அருள், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொறுப்பு) ப.அன்புச் செழியன், முன்னாள் இயக்குநர் க.பசும்பொன், மதுரை காமராஜர் பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி,  தமிழறிஞர் தமிழ் பெரியசாமி, இதயகீதம் ராமானுஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com