உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தும் விலையை அரசுதான் ஏற்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கான விலையை அரசுதான் கொடுக்க வேண்டும்.
உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தும் விலையை அரசுதான் ஏற்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்


உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கான விலையை அரசுதான் கொடுக்க வேண்டும். அதற்காக விலையை உயர்த்தக் கூடாது என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். நாகர்கோவிலில் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:  தமிழக கிராம ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த ரூ. 5,920 கோடி நிதியில் ரூ. 2,243 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 3,600 கோடி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 
தமிழக அரசுத் திட்டங்களை செயல்படுத்தும்போது, அதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என கருத்தில் கொள்ளும் ஆட்சியாளர்கள் மத்திய அரசு வழங்கிய நிதியை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். 
பால் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது. பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். உற்பத்தியாளர்களுக்கு விலை உயர்த்தி வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கான விலையை அரசுதான் கொடுக்க வேண்டும். அதற்காக விலையை உயர்த்தக் கூடாது. 
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் நடத்தும் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து தடை விதிக்கிறது.  கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகே செல்லங்கோணம் பகுதியைச் சேர்ந்த லீலாபாய் மரணம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும். அப்பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 
புதிய கல்விக் கொள்கை குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க வேண்டிய அவகாசம் ஆகஸ்ட் 15-இல் முடிந்து விட்டது. ஆகவே, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அளித்த கல்விக் கொள்கை குறித்தான பரிந்துரையை மத்திய அரசு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கை அமலானால் ஏழை குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும். எனவே, புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெற வேண்டும்.  ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவர்கள் குறித்து ரஜினிகாந்த் விரைவில் புரிந்து கொள்வார் என்றார் அவர். 
பேட்டியின்போது, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாவட்டச் செயலர் ஆர்.செல்லசுவாமி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் ஆகியோர் உடனிருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com