அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் நிரப்பும் விவகாரம்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நீரைக் கொண்டு நிரப்ப வேண்டாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் நிரப்பும் விவகாரம்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்


காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை பொற்றாமரை குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நீரைக் கொண்டு நிரப்ப வேண்டாம் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் அசோகன்  என்பவர் தாக்கல் செய்த மனுவில், 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்போது அத்திவரதர் சிலை வெளியே வைக்கப்பட்டுள்ளதால், அனந்தசரஸ் குளத்தை ஆழமாக தூர்வாரி சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும். ஒருவேளை தவறிவிட்டால், குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படவுள்ள தண்ணீரின் தன்மை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது. 
அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் அனந்தசரஸ் குளம், பொற்றாமரைக் குளம் மற்றும் கோயிலில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் உள்ள நீரை சேகரித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த நீரின் கடினத்தன்மை, அமிலத்தன்மை உள்ளிட்ட அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளது. 
மேலும் இவை குடிநீருக்கு இணையான தரம் கொண்டவையாக உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பொற்றாமரை குளத்தின் நீர் மட்டும் இளம் பச்சை நிறத்தில் மாறி இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது அறநிலையத் துறை சார்பில், அனந்தசரஸ் குளத்தை மழைநீரால் நிரம்படாத நிலையில் கோயிலில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரைக் கொண்டு நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது. 
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பொற்றாமரை குளத்தின் நீரைக் கொண்டு அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தினார்.மேலும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இந்துசமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com