வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

சட்ட மாணவர்கள் ஆராய்ந்து கற்க வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

DIN | Published: 20th August 2019 01:49 AM


சட்டம் பயிலும் மாணவர்கள் எதையும் ஆராய்ந்து கற்க வேண்டும் என தனியார் சட்டப் பள்ளி தொடக்க விழாவில்  உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பேசியுள்ளார். 
காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாதெமியின் சார்பில் புதிய சட்டப் பள்ளி தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பேசியதாவது: 
நமது நாட்டில் கற்பிக்கப்படும் கல்விகளில் சட்டக்கல்வி முக்கியமான ஒன்றாகும். சட்டக்கல்வி சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும். சர்வதேச தரத்திலான சட்டக் கல்வி முறை மூலம் நமது நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். சாதாரண கற்றலுக்கும் ஆராய்ந்து கற்பதற்கும் வேறுபாடு உண்டு. சட்ட மாணவர்கள் எப்போதும் ஆராய்ந்து படிக்க வேண்டும். மேலும் சட்ட மாணவர்கள், நீதியை நிலைநிறுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் கடின உழைப்பு, நம்பிக்கை, விடாமுயற்சியுடன் கற்க வேண்டும். இந்தப் புதிய சட்டப்பள்ளியின் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகள் சிறப்பானதாக உள்ளன. 
இந்தப் புதிய சட்டப்பள்ளி மாணவர்களிடையே விமர்சன பார்வையை தொடர்ந்து வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்வது சிறந்த பலனை தரும். புதிய சட்டப் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்கள், இங்கு வழங்கப்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர். 
விழாவில் பேசிய செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாதெமியின் அறங்காவலர் எம்ஏஎம்ஆர் முத்தையா, சட்டக் கல்வியில் உலகளாவிய நடைமுறைகள் கற்பிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தரமான சர்வதேச ஆசிரியர்களை இந்த புதிய சட்டப்பள்ளிக்காக ஒருங்கிணைத்துள்ளதாகக் கூறினார். 
முன்னதாக, புதிய சட்டப் பள்ளிக்கான பெயர்ப் பலகையை, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இலங்கை நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி மோகன்  பிரீஸ், நேபாள நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி கல்யாண் ஷேரúஸதா, அறங்காவலர் எம்ஏஎம்ஆர் முத்தையா ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். மேலும், புதிய சட்டப்பள்ளியில் சட்டம் பயில சேர்ந்துள்ள 30 மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பில் ரூ.2 கோடியே 29 லட்சம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது. இந்த விழாவில், செட்டிநாடு ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாதெமியின் முன்னாள் துணை வேந்தரும் நிர்வாக குழு உறுப்பினருமான பேராசிரியர் வி.ராஜி, குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழக இயக்குநர் பேராசிரியர் எஸ்.சாந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தேனி தனிப்படை போலீஸார் விசாரணை
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: தேசிய தேர்வு முகமைதான் பதிலளிக்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து திமுக குரல் கொடுக்கும்: சுப்புலட்சுமி ஜெகதீசன்
​மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன: ஜவாஹிருல்லா 
கண்டுபிடிப்பைக் கைவிட வலியுறுத்தி ஆராய்ச்சியாளருக்கு கொலை மிரட்டல்