பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹிலராமாணீ. உடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசா
சேலம் எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹிலராமாணீ. உடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசா

தமிழகத்தில் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் எடப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

இதில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.கே.தஹிலராமாணீ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நீதிமன்றத்தைத் திறந்து வைத்தார். விழாவில்,  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

எடப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் எடப்பாடி, பூலாம்பட்டி மற்றும் கொங்கணாபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் எல்லைகளைக் கொண்டதாக இருக்கும். 

தமிழகத்தில் மொத்தம் 1,149 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதில் சென்னையில் 126 நீதிமன்றங்களும், இதர மாவட்டங்களில் 1,023 நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன.  நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் கட்டுதல், பராமரித்தல், நீதிபதிகளுக்காக  குடியிருப்புகள்  கட்டுதல் போன்ற நீதித் துறைக்கான  மேம்பாட்டுப் பணிகளுக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் ரூ.1,000 கோடியை அரசு வழங்கியுள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளில், 456 புதிய நீதிமன்றங்களை ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையில் சிறப்பு நீதிமன்றம் உட்பட 33 புதிய நீதிமன்றங்களை 2018-19ஆம் ஆண்டில்  அமைத்துள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்களை கட்டுவதற்கு 2018-19ஆம் ஆண்டில் ரூ.101.89 கோடிக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

2019-20 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீதி நிர்வாகத்துக்காக ரூ.1,265 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர்,  முசிறியில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கள்ளக்குறிச்சியில் கூடுதல் சார்பு நீதிமன்றம், குழித்துறையில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ஸ்ரீவைகுண்டத்தில்  கூடுதலாக ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,  நாங்குநேரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில்  சார்பு நீதிமன்றம் சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் வட்டங்களில்  குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், காரிமங்கலம், விக்கிரவாண்டி, சிங்கம்புணரி, பல்லாவரம், மதுரவாயல்  ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம்  ஆகியவை வரும் ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ளன. வழக்குரைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியில் இருக்கும்போது இறக்கும் வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேமநல நிதி ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  

மேலும், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.4 கோடியில் இருந்து ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் 220 உரிமையியல் நீதிபதி பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் தமிழ்நாடு  அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2018-19ஆம் ஆண்டு நிரப்பப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற ஆணைப்படி, தமிழகத்தில் மாவட்டம்தோறும் நடைபெறும் மக்கள் நீதிமன்றம் வாயிலாக ஒரே நாளில் பல தரப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அதிக அளவில் தீர்வு கண்ட மாவட்டங்களில் சேலம் மாவட்டமும் ஒன்றாகும். 

சங்ககிரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடங்கள்  2012-ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டன. 

மேலும்,  மேட்டூரில் கட்டப்பட்டுள்ள  சார்புநிலை நீதிமன்ற வளாகம் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வளாகம் ஆகும். தமிழக அரசின் இடைவிடாத முயற்சியின் காரணமாக  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள்  தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு வருகின்றன. 

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீதித்துறையில் முழுமையாக மின்னணு ஆளுமை முறைகளைக் கொண்டு வர ஏதுவாக நீதிமன்றங்களில் நீதி சார்ந்த மின்னணு முத்திரைத்தாள் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  நீதித் துறையில் கணினிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர ஏதுவாக பல்வேறு பதவிகளுக்கு 1,188 பணியிடங்கள் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் மற்றும் கலையரங்கம் அமைப்பதற்கு  ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது.  

பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்: பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.  அதன்பேரில், விரைவில் தமிழகத்தில், பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யும்.

விரைவாக நீதி கிடைக்கச் செய்வதைக் கருத்தில் கொண்டு,  உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணியாளர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நீதிமன்றங்களின் தேவைகளுக்கு ஏற்ப உடனுக்குடன் நிறைவேற்றுகின்ற அரசாகத் திகழ்கிறது. 

நாங்கள் ஆசிரியர்களையும், நீதிபதிகளையும் மிகவும் மதிக்கிறோம். நீதியரசர்களையும், ஆசிரியர்களையும்,  கடவுளுக்குச் சமமானவர் என்று குறிப்பிடுவார்கள்.  எனவே,  நீதியரசர்களையும், ஆசிரியர்களையும் இறைவனுக்கு சமமாகக் கருதுவோம் என்றார்.

விழாவில், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ்,  ஜி.கே.இளந்திரையன், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு, மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com