தத்கல் டிக்கெட் முன்பதிவு: 9 ஆண்டுகளில் வருவாய் இருமடங்காக உயர்வு

இந்தியன் ரயில்வேக்கு கடந்த  9  ஆண்டுகளில் தத்கல் டிக்கெட் பதிவு மூலமாக ரூ.10,729 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தத்கல் டிக்கெட் முன்பதிவு: 9 ஆண்டுகளில் வருவாய் இருமடங்காக உயர்வு

சென்னை:  இந்தியன் ரயில்வேக்கு கடந்த  9  ஆண்டுகளில் தத்கல் டிக்கெட் பதிவு மூலமாக ரூ.10,729 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

2011-ஆம் ஆண்டு தத்கல்  திட்டத்தில் ரயில்வேயின் ஆண்டு வருவாய் ரூ.729 கோடியாக இருந்தது. இது 2019- இல்  இரு மடங்காக  ரூ.1,459 கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் தத்கல் டிக்கெட்டுக்காக ஏ.சி பெட்டிகளில் அதிக தூங்கும் வசதி பெட்டிகள் ஒதுக்குவது, பிரீமியம் தத்கல் திட்டம் அறிமுகம் ஆகியவை வருவாய் உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது. 

நீண்ட தொலைவுக்கு உகந்தது: ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல ரயில் போக்குவரத்து முக்கியமானதாக இருக்கிறது. நீண்ட தொலைவு பயணத்துக்கு உகந்தது,  கட்டணம் குறைவு போன்ற காரணங்களால் ரயில்களில் செல்ல அதிக மக்கள் விரும்புகின்றனர். இதற்காக குறிப்பிட்ட நாள்களுக்கு முன்னதாக, டிக்கெட் முன்பதிவு செய்து செல்வது வழக்கமாக இருக்கிறது. இருப்பினும், கடைசி நேரத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தேவையான இடவசதியை கொடுக்கும் வகையில்,  தத்கல் திட்டத்தில் முன்பதிவு செய்யும் முறை உள்ளது.  குறிப்பிட்ட ரயில்களில் தத்கல் டிக்கெட் முன்பதிவு முறை 1997-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2014-ஆம் ஆண்டு நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது. 

ரூ.10,729 கோடி வருவாய்: இந்த நிலையில்,  நாடு முழுவதும் தத்கல் முறையில், ரயில்களில் டிக்கெட்  பதிவு செய்து அதிக மக்கள் பயணம் செய்து வருவதால், ரயில்வேக்கு கிடைக்கும் வருவாய் உயர்ந்துள்ளது. 

குறிப்பாக, கடந்த 9 ஆண்டுகளில் தத்கல் டிக்கெட் பதிவு மூலமாக ரூ.10,729 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 2011-ஆம் ஆண்டு தத்கல் முறையில் ரயில்வேயின் ஆண்டு வருவாய் ரூ.729 கோடியாக இருந்தது. இது 2019-இல்  இரு மடங்காக  ரூ.1,459 கோடியாக உயர்ந்துள்ளது.  2009 -ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக வருவாய் அதிகரித்து வருகிறது. இருப்பினும், 2016-17-ஆம் ஆண்டில் வருவாய் மிகப்பெரிய எழுச்சி இருந்தது. இந்த ஆண்டில் வருவாய் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. 

ரயிலில்  இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி, மூன்று அடுக்கு ஏ.சி., இரண்டு அடுக்கு ஏ.சி., ஏசி சேர்கார் ஆகிய வகுப்புகளில் தத்கல்  டிக்கெட்டுக்காக அடிப்படை கட்டணத்துடன் 30 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. 

இந்த வகுப்புகளில் குறைந்தபட்ச கூடுதல் கட்டணம்  ரூ.100 வரையும், அதிகபட்ச கூடுதல் கட்டணம் ரூ.500 வரையும் இருக்கும். இரண்டாம் வகுப்பு அமரும் வசதி பெட்டியில் தத்கல் கட்டணம் ரூ.10 முதல் 15 வரையும் இருக்கும். 

தத்கல் டிக்கெட் வருவாய் உயர்வு குறித்து  ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், வருவாய் உயர்வுக்கு தத்கல் டிக்கெட்டுக்காக ஏ.சி பெட்டிகளில் அதிக தூங்கும் வசதி பெட்டிகள் ஒதுக்குவது, பிரீமியம் தத்கல் திட்டம் அறிமுகம் ஆகியவை முக்கிய காரணமாகும் என்றனர்.

வித்தியாசம்: அவசர கால ரயில் பயணங்களுக்கு உதவ தத்கல்  மற்றும் பிரீமியம் தத்கல்  ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.  இந்த இரண்டு ஒதுக்கீடு டிக்கெட்களுக்கும் விலை மட்டுமே வித்தியாசம். பிரீமியம் தத்கலுக்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை. விலை மாறிக் கொண்டே இருக்கும்.  இடங்களின் தேவை அதிகரிக்கும்போது, கட்டணமும் அதிகரிக்கும்.


இந்திய ரயில்வேயில் தத்கல் டிக்கெட் முன்பதிவு வருவாய்

நிதிஆண்டு                         வருவாய்

2010-11    729 கோடி
2011-12    847 கோடி
2012-13    994 கோடி
2013-14    1,298 கோடி
2014-15    1,283 கோடி
2015-16    1,242 கோடி
2016-17    1,424 கோடி
2017-18    1,453 கோடி
2018-19    1459 கோடி
மொத்தம்    10,720 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com