ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் தாமதம்: விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளிகள்!

குடியரசு  தின, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்தால், போட்டிகள்  நடத்துவதை அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது
ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் தாமதம்: விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளிகள்!


திண்டுக்கல் : குடியரசு  தின, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் ஏற்படும் தாமதத்தால், போட்டிகள்  நடத்துவதை அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாணவர்களுக்கான குடியரசு தின, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான(2019-20) விளையாட்டுப் போட்டிகள், குறுவட்ட அளவில் தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வருகின்றன. 30 முதல்  45 பள்ளிகளைக் கொண்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு, குறுவட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றிப் பெறும் மாணவர்கள் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகளுக்கும்,  அதிலிருந்து மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்படுகின்றனர். 

நிகழாண்டுக்கான குறுவட்டப் போட்டிகளை ஆகஸ்ட் 30-க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கும் சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. 

குறுவட்டப் போட்டிகளை (12 பழைய விளையாட்டுகள் மற்றும் சதுரங்கம்) நடத்துவதற்கு ரூ.99,100, மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு ரூ.1, 24, 600 வீதம் அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது. போட்டிகள் நடத்தி முடிந்து அதற்கான ரசீதுகளுடன் ஒப்படைக்கப்பட்ட 4 மாதங்களுக்கு பின்னரே, போட்டி நடத்தும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு  கிடைக்கிறது. இதனால், அரசுப் பள்ளிகளின் தலைûமையாசிரியர்கள் இந்த குறுவட்ட மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு முன் வருவதில்லை எனக் கூறப்படுகிறது. 

சொந்த பணத்தை செலவிட சில தலைமையாசிரியர்கள் முன் வரும் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது.

இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி, பல தனியார் பள்ளிகள் குறுவட்ட மற்றும் மாவட்ட போட்டிகளை நடத்துவதுடன், தங்கள் தரப்பு  மாணவர்களை அதிக அளவில் பங்கேற்க செய்து, அடுத்த சுற்றுக்கும் தங்களது பள்ளி மாணவர்களை அனுப்பிவிடுகின்றனர். இதனால், அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலான பிரிவுகளில் குறுவட்ட நிலையை கடந்து, அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை உள்ளதாக  குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக, தமிழ்நாடு உடற்கல்வியாளர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் எஸ். ஆரோக்கியசுவாமி கூறியது:  குடியரசு தின, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு முன்னதாகவே  நிதி  ஒதுக்கீடு செய்கிறது. 

ஆனால், விளையாட்டுப் போட்டி நடத்த வேண்டிய காலகட்டத்தில் அந்த நிதி கிடைப்பதில்லை. நிதி நெருக்கடி காரணமாகவே,  பெரும்பாலான அரசுப் பள்ளிகள் இந்த போட்டிகளை நடத்துவதற்கு முன்வருவதில்லை.  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை உரிய காலத்தில் வழங்காதது,  ஒரு வகையில் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் வழிமுறையாகவே உள்ளது. 

விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் சில அரசுப்  பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் நிதி வசூலித்தோ,  சொந்த பணத்தை செலவிட்டோ, உடற்பயிற்சி ஆசிரியர்கள் பொறுப்பிலோ ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை, முதன்மைக் கல்வி  அலுவலர் அல்லது மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் மூலம் உரிய  காலத்தில் வழங்கினால், மாநில அளவிலான போட்டிக்கு  அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகையினையும் வெல்ல முடியும் என்றார்.

புகைப்படங்களால் வீண்  செலவு! 


குடியரசு தின, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள்,  தனி நபர்  மற்றும் குழுப் பிரிவுகளில் பங்கேற்கும்போது, முறையே  தனிப் படம் மற்றும் குழுப் படம் கேட்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தலா 3 புகைப்படங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. 14, 17, 19 வயதிற்குள்பட்டோர் பிரிவுகளில் பங்கேற்கும் அரசுப் பள்ளி மாணவர்கள், புகைப்படங்களுக்கு மட்டுமே ரூ.3ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. முறைகேடுகளைத் தவிர்க்க மாணவரின் ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் பெறப்படுகிறது.  மாவட்ட போட்டிக்கு முதலிடம் பெறும் தனி நபர்  அல்லது  அணி மட்டுமே தேர்வு செய்யப்படுகிறது. அந்த நபர் அல்லது அணியின் புகைப்படத்தை மட்டும் பெறும் பட்சத்தில், வீண்  செலவு தவிர்க்கப்படும். ஆதாரில் உள்ள புகைப்படத்தை  ஆதாரமாக எடுத்துக்  கொள்ளும் பட்சத்தில், புகைப்படங்களுக்கு வீணாகச் செலவிடும் தொகையை, மாணவர்களின் தேவைக்கு செலவிட முடியும் என உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com