அத்திவரதர் சிலை வைக்கப்பட்டிருக்கும் அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளைக் கிணற்று நீரை நிரப்ப நீதிமன்றம் உத்தரவு

அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டு நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்திவரதர் சிலை வைக்கப்பட்டிருக்கும் அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளைக் கிணற்று நீரை நிரப்ப நீதிமன்றம் உத்தரவு


அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டு நிரப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொற்றாமரைக் குளத்தின் நீர் இளம்பச்சை நிறத்தில் இருப்பதால், அந்த நீரை அனந்தசரஸ் குளத்தில் ஊற்றினால், குளத்தில் பாசி படிய வாய்ப்பிருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்திருந்தது.

இந்த அறிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படவுள்ள தண்ணீரின் தன்மை குறித்து 19-ஆம் தேதி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

40 ஆண்டுகளுக்குப் பின்னர் அனந்தசரஸ் குளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டது. அத்திவரதர் சிலை 48 நாட்கள் வெளியே வைக்கப்பட்டு மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் சனிக்கிழமை இரவு சயன கோலத்தில் வைக்கப்பட்டது.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அனந்தசரஸ் குளத்தை ஆழமாக தூர்வார வேண்டும் என்றும், ஒருவேளை தவறிவிட்டால், குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அனந்தசரஸ் குளத்தில் உள்ள மண் மற்றும் நிரப்பப்படவுள்ள தண்ணீர் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், அத்திவரதர் சிலை வைக்கப்படும் குளத்தை நிரப்ப 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். 

மேலும் கோயிலின் பொற்றாமரைக் குளத்து தண்ணீர் குடிப்பதற்கு கூட தகுதியானது என ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பொற்றாமரைக் குளத்தில் உள்ள தண்ணீருடன் சேர்ந்து ஆழ்துளைக் கிணற்று நீரையும் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. 

அப்போது நீதிபதி, சென்னையில் உள்ள கோயில் குளம் ஒன்றை சிறப்பாக சுத்தம் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை (சிஎஸ்எஃப்), அனந்தசரஸ் குளத்தைப் போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்ய ஏன் அனுப்பக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது.

அப்போது உயர்நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் உள்ள சிஎஸ்எஃப் அதிகாரிகள் தரப்பில், அனந்தசரஸ் குளத்தை சுத்தம் செய்ய 50 முதல் 75 வீரர்களை அனுப்ப தயாராக இருப்பதாகவும், பேருந்து வசதி செய்து கொடுத்தால், உடனடியாக செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது இந்துசமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞர் எம்.மகாராஜா, அனந்தசரஸ் குளத்தை சுத்தம் செய்யும் பணிகளில் உள்ளூர் மக்கள் அறநிலையத் துறையுடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி 90 சதவீத பணிகளை செய்து முடித்துள்ளனர். 

எஞ்சியுள்ள பணிகளை இரவோடு இரவாக முடிக்க அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கண்காணிக்க பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

எனவே அனந்தசரஸ் குளத்தின் இறுதிக்கட்ட பணிகளையும் நாங்களே முடித்துக் கொள்கிறோம். மேலும் கடந்த சில நாள்களாக பெய்த மழையின் காரணமாக அத்திவரதர் சிலை வைக்கப்படும் அறைக்குள் தானாகவே நீர் சுரந்து வருவதாகத் தெரிவித்தார். 

அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனந்தசரஸ் குளத்தை நீங்களே தூர்வாரி முழுமையாக சுத்தம் செய்தால் நல்லது தான், எனவே சிஎஸ்எஃப் தேவையில்லை.

மேலும் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் அறையை சுத்தமான தண்ணீரைக் கொண்டு நிரப்ப வேண்டும். அனந்தசரஸ் குளத்தை எந்த தண்ணீரால் நிரப்ப வேண்டும் என்பது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வரும் 19-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில், பொற்றாமரைக் குளத்து நீரைக் கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்ப வேண்டாம் என்றும், ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தி குளத்தை நிரப்பலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com