தமிழ்நாடு

வேலூரில் விடிய விடிய கனமழை: வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

18th Aug 2019 04:26 AM

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், மாநகரில் தாழ்வான பகுதிகளிலுள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வேலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் சாரலுடன் லேசான மழை பெய்யத் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து இரவு முழுவதும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகாலை 3 மணியளவில் மழையின் தாக்கம் மேலும் அதிகரித்து, அதிகாலை 5 மணி வரை மழை கொட்டியது. 

பின்னர், படிப்படியாக குறைந்து மிதமான மழையாகத் தொடர்ந்து பெய்தது. 

இரவு முழுவதும் பெய்த கனமழையால் வேலூர் மாநகரில் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரின் தாழ்வான பகுதிகளிலுள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுடன், ஏராளமான வீடுகளுக்குள் 5 அடி அளவுக்கு மழை தண்ணீர் புகுந்தது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். அத்துடன், அந்த வீடுகளுக்குள் இருந்த உடைமைகளும் சேதமடைந்தன.

ADVERTISEMENT

110 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச மழை

வேலூரில் கடந்த 110 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை இரவு ஒரே நாளில் 166 மி.மீ. மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வாளரான "தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: 

வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழைப் பொழிவு கணக்கெடுப்புப்படி, வேலூரில் அதிகபட்சமாக 165.7 மி.மீ (16 செ.மீ), இதற்கு அடுத்தபடியாக காட்பாடியில் 109 மி.மீ மழை பதிவானது. 

அந்தவகையில், கடந்த 110 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூரில் வெள்ளிக்கிழமை இரவு அதிகபட்ச மழை பெய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  அதாவது, கடந்த 1909-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி வேலூரில் 106 மி.மீ. பெய்ததே இப்பகுதியில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை பொழிவாக இதுவரை இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாள் இரவில் 166 மி.மீ. மழை பெய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT