விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் அதிகாலை வரை பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சாலையோரங்களிலும், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், கீழ்பெரும்பாக்கம் இந்திரா நகர் தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை நீர் குளம்போல தேங்கியது.
சிறுவன் பலி: மேல்மலையனூர் வட்டம், கோயில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி செல்லமுத்து மகன் சிவபிரகாசம் (12). இவர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை இரவு சிவபிரகாசாம் பெற்றோருடன் தங்களது தொகுப்பு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அந்தப் பகுதியில் பெய்த பலத்த மழையால், அவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுவன் சிவப்பிரகாசம் உயிரிழந்தார். பெற்றோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து அவலூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கடலூரில் 130 மி.மீ. மழை: கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சனிக்கிழமை அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது.
சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூரில் 130.2 மி.மீ. மழை பதிவானது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.
தொடர்ந்து சனிக்கிழமை காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தபடியே இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.