தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து தேவைக்கேற்ப தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் ஆர்.காமராஜ்

18th Aug 2019 03:42 AM

ADVERTISEMENT

டெல்டா மாவட்ட பாசனத் தேவைக்கேற்ப மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
கல்லணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக சனிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாசன வசதி பெறுவதற்காக கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

இதன் மூலம் 4 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆழ்குழாய் மூலம் ஏற்கெனவே ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள குறுவை  சாகுபடியும் பயன்பெறும்.

மேட்டூரில் நீர் இருப்பு, நீர்வரத்து, எதிர்பார்க்கப்படும் மழை, கர்நாடகத்திடம் இருந்து சட்டரீதியாகக் கிடைக்க வேண்டிய தண்ணீர் ஆகியவற்றை பொருத்து, விவசாயத் தேவைக்கேற்ப தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும். டெல்டா மாவட்டங்களில் தற்போது நாற்று விடும் பணிதான் நடைபெறுகிறது. பயிர் சாகுபடி செய்யும்போது தேவைக்கேற்ப முழுமையாகத் தண்ணீர் திறந்துவிடப்படும். தற்போது விடப்படும் தண்ணீர் மூலம் ஏரிகள், குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அதேபோல, நிகழாண்டும் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படும். 

தூர்வாரும் பணியையும், குடிமராமத்து பணியையும் விரைவில் முடிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தண்ணீரை விவசாயிகள்  சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். தூர்வாரும் பணி, குடிமராமத்து பணி என்பது தொடர் நடவடிக்கை. அது தொடர்ந்து நடைபெறும். பெரும்பாலான பகுதிகளில் தூர்வாரும் பணி முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்றார் காமராஜ். 

காரைக்காலுக்கு தண்ணீர் வர வாய்ப்பில்லை: இதனிடையே, செய்தியாளர்களிடம் புதுச்சேரி மாநில வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தது:

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியிலிருந்து  புதுச்சேரி மாநிலச் சாகுபடிக்கு 7 டி.எம்.சி. தண்ணீரை தமிழக அரசு தர வேண்டும் எனக் கூறியுள்ளது. காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டால் மட்டுமே, காரைக்கால் பகுதிக்குத் தண்ணீர் வந்து சேரும். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் என்பது எங்களது மாநிலத்துக்கு வர வாய்ப்பில்லை. எனவே, காவிரியில் தமிழக அரசுக் கூடுதலாகத் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT