தமிழ்நாடு

முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம்: சேலத்தில் நாளை தொடக்கம்

18th Aug 2019 04:42 AM

ADVERTISEMENT

முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் சேலத்தில் வரும் திங்கள்கிழமை தொடங்கப்பட உள்ளது. 
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஜூலை 18-ஆம் தேதியன்று முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்துக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் அரசுத் துறை அலுவலர்கள் குழுவானது மக்களிடம் மனுக்களைப் பெற உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள்ளாக அவர்கள் மனுக்களைப் பெற்று அவை கணினியில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பப்படும். இந்த மனுக்கள் மீது ஒரு மாத காலத்துக்குள் தீர்வு எட்டப்படும்.
மனுக்களின் மீதான தீர்வுக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவில் விழாக்கள் நடத்தப்படும். இந்தத் திட்டத்தை சேலம் மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார். 
எடப்பாடி, வனவாசி ஆகிய இடங்களில் வரும் திங்கள்கிழமையும், தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி ஆகிய இடங்களில்  செவ்வாய்க்கிழமையும் முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்ட முகாமில் பங்கேற்று பொது மக்களிடம் இருந்து மனுக்களை முதல்வர் பழனிசாமி பெற உள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT