தமிழ்நாடு

மயிலாடுதுறை தனி மாவட்ட அறிவிப்பு: அடுத்த ஆண்டில்  முதல்வர் வெளியிடுவார்

18th Aug 2019 03:21 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை தமிழக முதல்வர் பரிசீலனை செய்து வருகிறார். இதற்கான அறிவிப்பை அடுத்த ஆண்டில்  வெளியிடுவார் என்று மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட வேலை வாய்ப்பு வழிகாட்டுக்குழுமம், மயிலாடுதுறை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் மற்றும் மயிலாடுதுறை சென்ட்ரல் ஷைன் லயன்ஸ் சங்கம் ஆகியன சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தேர்வு செய்யப்பட்ட 823 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி, சிறப்புரை ஆற்றினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
மயிலாடுதுறையைப் பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. இதன் மீது வருகிற ஆண்டு தமிழக முதல்வர் நல்ல அறிவிப்பை வெளியிடுவார். காவிரியில் ஜூன் 12-இல் திறக்க வேண்டிய தண்ணீர், தற்போது திறக்கப்பட்டுள்ளது. தற்போது நாற்று விடும் பணிக்காக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், அதிக நீர்வரத்து இருந்து அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டால் அதைப் பாசனத்துக்காகப் பயன்படுத்தலாம். இந்த ஆண்டு விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க இயற்கை உதவும் என்றார்.
இந்த முகாமில், 65 தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் 5 திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றன. முகாமில், கலந்துகொண்ட 4,237 வேலைநாடுநர்களில், 823 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், நிகழ்ச்சியில் 27 மாற்றுத் திறனாளி தம்பதியினருக்கு தலா 8 கிராம் வீதம் 216 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.
ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் வீ.ராதாகிருஷ்ணன்,
எஸ்.பவுன்ராஜ், பி.வி.பாரதி, தருமபுரம் ஆதீன கல்வி நிறுவனங்களின் செயலர் எம்.திருநாவுக்கரசு, தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வர் எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT